Published : 26 Jan 2019 09:25 AM
Last Updated : 26 Jan 2019 09:25 AM

பொதுமக்களிடம் ஆதார் பயன்பாடு அதிகரிப்பு; தினமும் 3 கோடி பேர் ஆதாரை பயன்படுத்துகின்றனர்: யுஐடிஏஐ நிறுவனம் தகவல்

நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் ஆதார் எண்ணை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. தினமும் சராசரியாக 3 கோடி பேர் ஆதாரைப் பயன்படுத்தி வருவதாக யுஐடிஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தகுதி யானவர்களுக்கு சென்றடைவதை உறுதிபடுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணம் மற்றும் கை விரல் ரேகை, கண் கருவிழிப் படலம் ஆகியவை அடிப்படையில் யுஐடிஏஐ நிறுவனம் சார்பில் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், இதைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

அதன் பலனாக நாடு முழுவதும் இது வரை 3 கோடியே 50 லட்சம் போலி சமையல் எரிவாயு இணைப்புகள், 1 கோடியே 60 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஆதார் மூலமாக சமூகநலத் திட்டங்களை வழங்குவதன் மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.77 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்றும், அந்தத் தொகையைக் கொண்டு மத்திய அரசு செயல்படுத்தியுள்ள ஏழை எளிய மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ போன்ற 3 புதிய திட்டங்களைத் தொடங்க முடியும் என்றும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஆர்வம்

இதற்கிடையில் ஆதாரை அடிப்படை யாகக் கொண்டு பல்வேறு சேவையைப் பெறுவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. தினமும் 3 கோடி பேர் ஆதாரைப் பயன்படுத்தி சேவைகளைப் பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் இதுவரை 123 கோடியே 17 லட்சம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 25 கோடியே 63 லட்சம் பேர் திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், ஆதாரைப் பயன்படுத்தி காஸ் மானியம் பெறுவது, குடும்ப அட்டையில் பொருட்களை வாங்குவது, சிம் கார்டு வாங்குவது, பணப் பரிவர்த்தனை செய்வது, ஓய்வூதியம் பெறுவது என இதுவரை 2,671 கோடி முறை ஆதார் பயன்படுத்தப் பட்டுள்ளது.

நாளொன்றுக்கு சராசரியாக 3 கோடி பேர் ஆதாரைப் பயன்படுத்தி சேவைகளைப் பெற்று வருகின்றனர். தினமும் 10 கோடி பேர் பயன்படுத்தக்கூடிய வகையில் அதற்கான சர்வர் கட்டமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பு

இது மட்டுமல்லாது, பல இடங்களில் ‘உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் (KYC)’ முறையின் கீழ் உரிய விவரங்களை அளிக்க, ஆதாரைப் பயன்படுத்துவதில் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுவரை 696 கோடி இடங்களில் கை விரல் ரேகை பதித்து, ஆதார் மூலம் ‘உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள்’ படிவங்கள் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சிம் கார்டு விற்பனை மையத்தில் புதிய சிம் கார்டு வாங்கிய ஒருவரிடம் கேட்டபோது, “இதற்கு முன்பு, உரிய படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். முக அடையாளம் மற்றும் முகவரி அடையாளம் ஆகியவற்றுக்கான ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும். பணம் செலவிட்டு புகைப்படம் எடுத்து ஒட்ட வேண்டும்.

ஆதார் வந்த பிறகு கை விரல் ரேகை வைத்தால் போதும். புகைப்படம் மற்றும் ஆவண நகல் எடுக்க செலவிடும் நேரம், பணச் செலவு அனைத்தும் மிச்சமாகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x