Published : 07 Jan 2019 06:48 PM
Last Updated : 07 Jan 2019 06:48 PM
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி தப்புமா? பறிபோகுமா? சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்த சட்ட நிபுணர் ரமேஷ் பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி. ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார். 1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடை செய்யக்கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பேருந்துகள் மீது கல்லெறியப்பட்டது. பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் தான் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரது தண்டனையை ஒரு மாதகாலம் நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீனும் வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்மூலம் சிறைக்குச் செல்வதிலிருந்து அமைச்சர் தப்பித்தாலும் அவர் பதவி பறிபோகாது என சிலரும், தண்டனைதான் நிறுத்திவைப்பு குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அமைச்சர் பதவி, எம்.எல்.ஏ பதவி இரண்டும் பறிபோகும் என சிலரும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சட்டரீதியாக கருத்தறிய மூத்த வழக்கறிஞர் என்.ரமேஷிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் அளித்த பதில்:
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளார்கள். இதனால் அவரது பதவி தப்புமா?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 உள்ளது. அதில்தான் எம்எல்ஏ, எம்.பி.க்கள் தண்டனை குறித்து கூறுகிறது. நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலோ, குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலோ அது குறித்து என்ன நடைமுறை என்பது குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செக்ஷன் 8(1), 8(2), 8(3) என மூன்று பிரிவுகள் ஒவ்வொரு வழக்குகள் பற்றிக் கூறுகிறது. அதில் 8(1) இந்திய தண்டனைச்சட்டம், மற்ற தண்டனைச் சட்டங்களில் எத்தனை வருடம் தண்டனை பெற்றால் இவர்கள் தகுதியிழப்பார்கள் என்று கூறுகிறது.
செக்ஷன் 8 (2)என்ன சொல்கிறது என்றால் உணவுப்பொருள் கலப்படச் சட்டம் செய்தல், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற பல வகைகளில் எவ்வளவு வருடம் தண்டனை கிடைத்தால் இவர்கள் தகுதியிழப்பு அடைவார்கள் என்று சொல்கிறது.
இதில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பொருந்துவது 8 (3) என்ற செக்ஷனுக்குக் கீழ். ஏதாவது ஒரு குற்றத்தில் 2 ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டனை பெற்றால் அவர் தண்டனை பெற்ற உடனேயே, அதாவது அப்படி தண்டனை வழங்கப்படும்போது குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார் அல்லவா? அந்த கணமே அவர் பதவி பறிபோய்விடும் என்று கூறுகிறது.
தண்டனையை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதே. அப்புறம் எப்படி பதவி போகும் என்று கேள்வி வருகிறதே?
தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளார்கள். நான் முன்னரே சொன்னதுபோல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது மாறாது அல்லவா? கன்விக்ஷன் (conviction) என்று சொல்கிறோமே அது குற்றவாளி என அறிவிப்பது. சென்டென்ஸ் (sentence) என்பது தண்டனை. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆகவே தண்டனையை மட்டுமே நிறுத்தி வைத்துள்ளார்கள். இதன்மூலம் சிறைக்குப் போவதிலிருந்து மட்டுமே தப்பிக்க முடியும். குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது பதவி பறிபோகும்.
மேல்முறையீடு செய்தால் பதவி பறிபோவதிலிருந்து தப்பிப்பார் என்கிறார்களே?
இதுபோன்ற குழப்பம்தான் அனைவரிடமும் நிலவுகிறது. இதில் நான் குறிப்பிட வேண்டியது செக்ஷன் 8 (4) என்கிற பிரிவு இருந்தது. அதில் இதுபோன்ற விவகாரங்கள் வந்தன. அதாவது தற்போது எம்எல்ஏ, எம்.பியாக இருக்கும் ஒருவர் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர் அடுத்த 3 மாதம் வரை அல்லது அவர் மேல்முறையீடு செய்தாலோ அவர் பதவி பறிபோவதைத் தடுக்க முடியும் என்றிருந்தது.
அதன் பின்னர் அந்த 8 (4) சட்டப்பிரிவு என்ன ஆனது?
இந்தப் பிரிவு செல்லாது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக இருக்கிறது என்று லில்லிதாமஸ் என்பவர் 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது என்றால் 8(4) என்பதே செல்லாது எனத் தீர்ப்பளித்தது. ஒரு எம்எல்ஏ அல்லது எம்.பி. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெறப்பட்டாலே அவர் தகுதியிழப்புக்கு ஆளாவார். அவர் பதவி பறிபோகும். கன்விக்ஷன் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் அவருக்கு தண்டனையை ரத்து செய்தாலோ, நிறுத்தி வைத்தாலோ அவர் உத்தமர் ஆகிவிட மாட்டார் என்று தெரிவித்தது.
ஒருவேளை குற்றவாளி (conviction) என்று சொன்னதை நிறுத்திவைத்தால் அவர் பதவியிழப்பில் இருந்து தப்பிக்கலாம். தற்போது தண்டனையை நிறுத்தி வைப்பது என்றால் அவர் சிறை செல்வதிலிருந்து தப்பிக்கிறார் என்றுதான் அர்த்தம். ஆனால் கன்விக்ஷன் என்று சொல்கிறோமே குற்றவாளி என்று அறிவித்ததை எக்காலத்திலும் நிறுத்தி வைக்க வாய்ப்பில்லை.
அவர் மேல்முறையீட்டிற்குச் சென்று அதை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டால் பதவி தப்பிக்குமா?
எந்தக் குற்றம் செய்துவிட்டு மேல் முறையீடு போனாலும் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் எடுத்துக்கொள்ளும். ஆனால் தண்டனையை மட்டுமே நிறுத்தி வைப்பார்கள். குற்றவாளி என்று அறிவித்ததை எந்நாளும் நிறுத்தி வைக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தால் பதவி தப்புமா?
கண்டிப்பாக பதவி தப்பும். ஆனால் எந்தக் காலத்திலும் அப்படி நடந்ததாக வரலாறே இல்லை.
மேல்முறையீட்டிற்குச் சென்றாலும் அவரது பதவி பறிபோகுமா?
ஆமாம். மேல்முறையீட்டிற்குச் சென்றாலும் அவரது பதவி பறிபோவது உறுதி. 3 மாத அவகாசம் மேல்முறையீடு என்று செக்ஷன் 8(4)-ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப்பிரிவு செல்லாது என 2013-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. முரணானது என உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆகவே நான் மேல்முறையீடு போகும்வரை பதவியில் இருப்பேன் என்றெல்லாம் கூற முடியாது.
அப்படியானால் உடனடியாக பதவி பறிக்கப்படுமா?
ஆமாம் எப்போது தண்டனை கொடுத்தார்களோ உடனடியாக அது அமலாகிவிடும்.
அவரது மேல்முறையீடு என்பதில் தண்டனையிலிருந்து தப்பிக்க மட்டும்தான் உதவுமா?
அதிலும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் தண்டனையை நிறுத்திவைக்க கால அவகாசம் மட்டுமே கொடுத்துள்ளார்கள். மேல்முறையீட்டில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை நீட்டித்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் சிறைக்கும் போக வேண்டும்.
அப்படியானால் மேல்முறையீட்டில் குற்றவாளி என்பதையும் ரத்து செய்யக் கோருவார்களா?
கண்டிப்பாக தண்டனை ரத்து, குற்றவாளி என்பதை நீக்கக் கோருவார்கள்.
இவ்வாறு மூத்த வழக்கறிஞர் என். ரமேஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT