Published : 31 Jan 2019 11:20 AM
Last Updated : 31 Jan 2019 11:20 AM
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தமில்லாமல் பிரதமர்மோடி மதுரை மண்டேலா நகரில் தோப்பூர் ‘எய்ம்ஸ்’மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிச் சென்றுள்ளார். இந்த விழா, முழுக்க முழுக்க மத்திய அரசு விழாவாகவே நடந்து முடிந்துள்ளது. பாஜக திட்டமிட்டபடி தோப்பூர்‘எய்ம்ஸ்’விழா, பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருந்தாலும் விழாவுக்கு வந்திருந்த மோடி முகத்தில் மகிழ்ச்சியில்லை. இருக்கமாக இருந்து சென்றார்.
பொதுவாக விழாக்களில் பிரதமர் மோடி பார்வையாளர்களை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்தபடியே பங்கேற்பார். அதுபோல், அவரது பேச்சில் எழுச்சியும், ஆவேசமும் இருக்கும். ஆனால், ‘எய்ம்ஸ்’விழாவிலும் சரி, அந்த விழா அருகே நடந்த பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திலும் சரி அவரது பேச்சு எழுச்சியூட்டும் விதமாக அமையவில்லை. ஆனால், ‘எய்ம்ஸ்’ மதுரைக்கு கிடைத்ததிலும், மோடி நேரடியாக வந்து அடிக்கல் நாட்டி சென்றதின் பின்னணியிலும் விவரம் தெரிந்தவர்கள் கூறிய அரசியலை கேள்விப்பட்டு தற்போது பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பாஜக இந்த முறைஅதிமுகவுடன் கூட்டணிஅமைத்து போட்டியிட முடிவுசெய்து அவர்களுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதில், பாஜக கேட்கும் முக்கிய தொகுதியாக மதுரை இருக்கிறது. அதிமுகவும் பாஜகவுக்கு மதுரையை விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மதுரையில் பாஜக போட்டியிட ஆர்வப்படுவதற்கும், இந்தத் தொகுதியை கைப்பற்ற திட்டமிடுவதற்கும் முக்கியக் காரணம், இந்த தொகுதியின் கடந்தகால வரலாறு பாஜகவுக்கு நம்பிக்கையளித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
குறிப்பாக எந்த தனிப்பட்ட செல்வாக்கும், வாக்குவங்கியும் இல்லாத சுப்பிரமணியன் சுவாமி கூடபோட்டியிட்டு வெற்றிபெற்ற வரலாறு மதுரைக்கு உள்ளது. 8 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை சிபிஐ-யும், 3 முறை சிபிஎம்மும் வெற்றி பெற்றுள்ளன. தமாகா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2009, 20014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் மட்டுமே திமுகவும், அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
சட்டப்பேரவை தேர்தல்களில் மதுரையில் செல்வாக்கு செலுத்தும் திராவிடக் கட்சிகள்,மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிடத் தயக்கம் காட்டியே வந்துள்ளன. மேலும், தென்மாவட்டங்களின் வளர்ச்சியில் திராவிடக் கட்சிகள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. அதனால், இங்குள்ள தொழில் முனைவோர்களும், பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர். இதை சாதகமாக்கி பாஜக மதுரைக்கும், தென் மாவட்டங்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களவைத் தேர்தலில் ஆதாயம் பார்க்கத் துடிப்பதாக கூறப்படுகிறது.
மதுரையைத் தவிர கன்னியாகுமரி, தென்காசி, திருப்பூர், கோவை உள்ளிட்ட 9 தொகுதிகள் பாஜக கேட்பதாகக் கூறப்படுகிறது. இதில், மதுரையை மையமாகக் கொண்டு தென்மாவட்டங்களில் பாஜக கால் ஊன்ற முயற்சி செய்வதாகத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பலவீனமாக இருக்கும் மாநிலத்தில்தான் போட்டியிட்டு வெற்றி பெற ஆசைப்படுவதாகவும், அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் மோடி போட்டியிட உள்ளதாக அக்கட்சியில் ஒரு தகவல் பரவுகிறது. அதில், முதலிடத்தில் இருப்பது மதுரை என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறுகிறார்கள். அதனாலே, தமிழக அரசே விரும்பாவிட்டாலும் ‘எய்ம்ஸ்’மருத்துவமனையை மதுரைக்கு பாஜக கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. ‘எய்ம்ஸ்’விழாவோடு மதுரை-சென்னை தேஜஸ் சொகுசு ரயிலையும், மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு அடிக்கல் நாட்டவும் ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடி மீண்டும் ஒரு முறை மதுரைக்கு வரவழைத்து இந்த திட்டங்களை தொடங்கி வைத்து பிரமாண்ட பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்ய உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். மதுரை தொகுதியில் மோடி போட்டியிடாத பட்சத்தில் உள்ளூர் பிரமுகர்களை களம் இறக்காமல் தேசிய அல்லது மாநில அளவில் எல்லோராலும் அறியப்பட்டஒரு விஐபி வேட்பாளரை களம் இறக்கி அவர்களை வெற்றிபெற வைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரயில்வே அமைச்சர் பொறுப்பாளரா நியமனம் செய்ததின் பின்னணி
மத்திய ரயில்வே அமைச்சரும், நிதி அமைச்சர்பொறுப்பை கவனிக்கும் பியூஸ் கோயல் தமிழக மக்களவைத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சரவையில் இவர், பிரதமர் மோடிக்கு நம்பிக்கைக்குரியவராகவும் ,நன் மதிப்பைப் பெற்றவராகவும் உள்ளார். இவர்தான் இந்த முறை மத்திய நிதித்துறை பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதில், தமிழகத்திற்கு குறிப்பாக பாஜக போட்டியிட உள்ள மக்களவைத் தொகுதிகளைக் குறி வைத்து அதிக அளவு திட்டங்களையும், நிதியையும் ஒதுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகே கூட்டணியை அறிவித்து தமிழகத்தில் தேர்தல்பணியை பாஜக முடுக்கிவிட திட்டமிட்டுள்ளனர். அதனாலே, மதுரை வந்த பிரதமர் மோடி, வெறும் அறிவிப்புகளாக புதிய திட்டங்களை அறிவித்துவிட்டுச் செல்ல மனமில்லாமல் சாதனைகளை சொல்லிச் சென்றதாக கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT