Published : 05 Jan 2019 02:50 PM
Last Updated : 05 Jan 2019 02:50 PM

திருவாரூருக்கு இப்போது தேர்தல் வேண்டாம்: ஆட்சியர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்

'கஜா' புயல் நிவாரண பணிகள் முடிவடையாததால், திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் என, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மாவட்ட ஆட்சியரிடத்தில் வலியுறுத்தியுள்ளன.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 28 ஆம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்னும் நிவாரணப் பணிகள் முழுமை பெறவில்லை. மக்கள் இயல்புநிலைக்கு திரும்பாத நிலையில், அங்கு தேர்தல் நடந்தால் மாவட்ட நிர்வாகத்தின் கவனம் முழுவதும் தேர்தலில்தான் இருக்கும். எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்பதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தேர்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தார். இதே கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் டி.ராஜாவின் மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து ஓரிரு நாளில் அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு கடிதம் அனுப்பியது. இதனை அவர் மாவட்ட தேர்தல் அதிகாரியான திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார். இன்று (சனிக்கிழமை) மாலை இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இன்று மதியம் அனைத்துக் கட்சி கூட்டத்தை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நிர்மல் ராஜ் நடத்தினார். இக்கூட்டத்தில்  திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அனைத்துக் கட்சியினரும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக சென்றடையவில்லை என்பதால் தற்போதைய தேர்தலை நிவாரண பணிகள் முடிவடைந்த பின்னர் வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் ,அதனுடன் சேர்த்து இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x