Published : 31 Jan 2019 10:06 AM
Last Updated : 31 Jan 2019 10:06 AM

வீடு தேடி வரும் மரச்செக்கு! சிறு வணிகர்களுக்கான சந்தை- அசத்தும் கோவை இளைஞர்

ஆர்.கிருஷ்ணகுமார்

“உலக அளவுல பிரபலமான உணவு நிறுவனத்துல வேலை செஞ்சேன். என் பொண்ணுங்களுக்கு பிராய்லர் சிக்கன் தர வேணாமுன்னு டாக்டர் சொன்னாரு. நம்ம குடும்பத்துல இருக்கறவங்க மாதிரிதானே மத்தவங்களுமுன்னு நினைத்து, மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் கொடுத்துக்கிட்டிருந்த வேலைய உதறித் தள்ளினேன். கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். வீடு தேடி வரும் மரக்செக்கு, சிறு வணிகர்களுக்கான சந்தைனு இன்னிக்கு வெற்றியடைஞ்சிருக்கேன்” என்கிறார் கோவையைச் சேர்ந்த கே.ராஜேஷ்(42). உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், மரச்செக்கு எண்ணெய் பயன்பாடும் அதிகரிக்கிறது. ஆனால், நாம் வாங்குவது உண்மையான மரச்செக்கு எண்ணெய்தானா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. இதற்கு தீர்வுகண்டுள்ளார் இவர். வீட்டுக்கே மரச்செக்கு கொண்டுவந்து, நம் கண்முன்னே நிலக்கடலை, கொப்பரை, எள் அரைத்து, எண்ணெய் பிழிந்து தருகின்றனர். கோவை சாய்பாபா காலனியில் உள்ள அவரது `ஆஸ்க்` நிறுவனத்தில் சந்தித்தோம்.

“அப்பா கீர்த்திகுமார். பெங்களூர்ல தொழிற்சாலைகளுக்கான எண்ணெய் வியாபாரம் செய்தார். அம்மா பட்டம்மாள், சேலத்தைச் சேர்ந்தவங்க. நான் படிச்சது பெங்களூர்ல. 1998-ல் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன். ஆனால், சாப்ஃட்வேர் வேலைக்குப் போகறதுல பெரிய ஆர்வமில்ல. பெங்களூர்ல விவேக் நிறுவனத்துல சேல்ஸ்மேனாக சேர்ந்தேன். 6 வருஷத்துல 6 ப்ரமோஷன். இங்கிருந்து வெளியேறும்போது பொதுமேலாளராக பதவி வகிச்சேன். 2004-ல ரிலையன்ஸ் நிறுவனம் சில்லறை வியாபாரத்துல இறங்கினாங்க. அப்ப மார்க்கெட்டிங்ல இருந்தவங்களுக்கு அந்த நிறுவனத்துல சேருவது பெரிய கனவு. 1,000 பேர் இன்டர்வியூல கலந்துக்கிட்டாங்க. அதுல நான் செலக்ட் ஆகி, சீனியர் ஆபரேஷன் மேனேஜரா பொறுப்பேற்றேன். 3 வருஷத்துக்கு அப்புறம், வேற கம்பெனியில சேர்ந்தேன். ஒன்றரை வருஷம் கழிச்சி சர்வதேச அளவுல பிரபலமான, உணவுப் பொருட்கள் விற்கும் நிறுவனத்துல சேர்ந்தேன். அந்த நிறுவனத்துக்காக, பிராய்லர் சிக்கன் விற்கும் கடைகள தமிழ்நாடு முழுக்க அமைக்கும் பணியில ஈடுபட்டேன்.

வாழ்க்கையை மாற்றிய வார்த்தைகள்

இதுக்கு நடுவுல, 2000-ம் ஆண்டுல திருமணம். மனைவி அன்னபூர்ணா ராஜேஷ். இரு பெண் குழந்தைகள். 2002-ல கோவைக்கு பணி மாற்றல்ல வந்தேன். பெங்களூருவவிட கோவை ரொம்ப பிடிச்சது. அதனால, குடும்பத்தோட கோவைக்கு வந்துட்டேன். ஒரு நாள் உடம்பு சரியில்லாம இருந்த குழந்தைய டாக்டர்கிட்ட காட்டினப்ப, இனிமேல் `பிராய்லர் சிக்கன் கொடுக்காதீங்க`னு சொன்னாரு. இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையவே மாத்துச்சி.

டாக்டர் சொல்லறத கேட்டு, நம்ம குழந்தைங்களுக்கு பிராய்லர் சிக்கன் கொடுக்காம இருக்கறோம். ஆனா, அதை மத்தவங்களுக்கு நாம விக்கறமேனு நெனச்சேன். அப்ப மாசம் ரூ.2.5 லட்சம் சம்பளம். ஆனாலும், துணிஞ்சு அந்த வேலைய உதறித் தள்ளினேன். நாமளே ஒரு வேலையை உருவாக்கிக்குவோம். மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்கள கொடுக்கலாமுன்னு நெனெச்சேன். மனைவி ரொம்ப சப்போர்ட் செஞ்சாங்க.

2015-ல உணவுப் பொருட்கள், ஆரோக்கியம் தொடர்பா பல ஆய்வுகளை மேற்கொண்டேன். நாம பயன்படுத்தற சமையல் எண்ணெயால உடலுக்கு எவ்வளவு கெடுதல்னு தெரிஞ்சது.  கடையில விக்கற சமையல் எண்ணெய்ங்க பெரும்பாலும் குரூட் ஆயில்ல இருந்து தயாரிக்கறாங்கனு தெரிஞ்சது. புற்றுநோய் அதிகரிக்க இந்த எண்ணெய் முக்கியக் காரணம்.  அடுத்து மைதா. அதேபோல, பிராய்லர் சிக்கன். வயிறு சம்பந்தமான புற்றுநோய் மற்றும் பல பிரச்சினைகளுக்கு கலப்பட எண்ணெய், மைதா, பிராய்லர் சிக்கன் எல்லாம் முக்கியக் காரணம். அதேமாதிரி, கலப்பட மளிகைப் பொருட்களாலயும் பல பாதிப்புகள் ஏற்படுவது தெரிய வந்தது. நல்ல பொருட்களைப் பயன்படுத்தணுமுன்னு மக்கள் நெனைக்கிறாங்க. ஆனா, தேடிப் போய் வாங்க நேரமில்ல. இதனால,  onlystaples.comனு ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விற்பனை மையத்தை தொடங்கினோம். தரமான மளிகைப் பொருட்கள வீடு தேடிக் கொடுக்கறதுதான் இதன் நோக்கம். இன்னிக்கு வரைக்கும் எங்க வீட்டுல பயன்படுத்தாத எதையும், எங்க நிறுவனத்துல விக்கறது கிடையாது. 

நண்பர்கள் ஆண்டனி, பிரவீன் உள்ளிட்டோர் ஆதரவா நின்னாங்க. ஆன்லைன் மளிகை விற்பனை நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. இந்த சமயத்துலதான், பெரிய கார்ப்பரேட் நிறுவனம், பல்லாயிரம் கோடி முதலீட்டுல ஆன்லைன் மளிகை விற்பனையில இறங்கினாங்க. அவங்களோட போட்டிய எங்களால சமாளிக்க முடியல. ஆனாலும், தைரியத்த கைவிடல. மாத்தி யோசிச்சோம்.

இதுக்குநடுவுல கட்டிட வாடகை, தொழிலாளர்கள் சம்பளம்னு பெரிய நெருக்கடி. இதே மாதிரிதான நிறைய சிறு நிறுவனங்களுக்கும் இருக்குமுன்னு நெனச்சோம். நிறைய சிறு தொழில்முனைவோர் தொழில் தொடங்கினாலும், தொடர்ந்து நடத்த முடியாம மூடிடறாங்க. அவங்களுக்கு உதவணுமுன்னும் நெனச்சோம். 2017-ல் `ஆஸ்க் மார்க்கெட் பிளேஸ்` நிறுவனத்தை தொடங்கினோம். காபி, மளிகை, தின்பண்டம், துணி, இயற்கை விளை பொருட்கள், மரச்செக்கு எண்ணெய் எல்லாத்தையும், உற்பத்தியாளர் இங்கு கொண்டுவந்து விக்கலாம். வாடகை கிடையாது. எங்க தொழிலாளர்களே விற்பனைக்கும் உதவுவாங்க. தரமான பொருட்களை மட்டும் விக்கணும். லாபத்துல குறிப்பிட்ட சதவீதம் கொடுத்தா போதும். முதல்ல சாய்பாபா காலனியில இத தொடங்கினோம். அடுத்த வடவள்ளி, லாலி ரோடுனு விரிவடஞ்சது. பிப்ரவரி மாசம் பெங்களுருவிலேயும் தொடங்கறோம்.

அடுத்ததா, மரச்செக்கு எண்ணெய். இப்பவெல்லாம் எல்லா கடையிலயும் மரச்செக்கு எண்ணெய் விக்கறாங்க. ஆனா, நிறைய கடையில கலப்பட எண்ணெயை, மரச்செக்கு எண்ணெய்ங்கற பேர்ல தர்றாங்க. இதுக்கு தீர்வு என்ன? நடமாடும் மரச்செக்கு (மொபைல்) வாகனத்த தொடங்கினோம். ஒரு வேன்ல மரச்செக்கு மிஷன வைச்சிக்கிட்டு, வீடு வீடா போய், அவங்க கண்ணு முன்னாடியே எண்ணெய் அரச்சி தர்றோம். இந்த திட்டத்தை உலகத்திலேயே முதல்ல ஆரம்பிச்சது நாங்கதான். இதுக்காக, பல விவசாயிகள்கிட்ட நிலக்கடலை,  பொள்ளாச்சியில் கொப்பரை, சேலம் மாவட்டத்துல எள் வாங்கறோம். நண்பர் பிரபாகரன்  நிறைய ஆலோசனை வழங்கினாரு. தரமான பொருட்களை வாங்கி, வாடிக்கையாளர் கண் முன்னாடியே எண்ணெய் அரைக்கிறோம். கடலை எண்ணெய் லிட்டர் ரூ.250, கொப்பரை தேங்காய் எண்ணெய் ரூ.300, நல்லெண்ணெய் ரூ.320-க்கு விக்கறோம்.

இளைஞர்களுக்கு உதவி

2018 ஜூலையில இத தொடங்கினோம். நல்ல வரவேற்பு. திருப்பூர்ல அடுத்த வாரமும் பெங்களூர்ல அடுத்த மாதமும் மொபைல் மரச்செக்கு வாகனத்த அறிமுகப்படுத்துகிறோம். பிரதம மந்திரியின் முத்ரா யோஜனா திட்டத்துல இளைஞர்கள தேர்வு செஞ்சி, தகுதியானவர்களுக்கும் மொபைல் மரச்செக்கு வாகனம் வழங்கத் திட்டமிட்டிருக்கோம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அதிகாரி கண்ணன், பாரத ஸ்டேட் வங்கி ஓய்வுபெற்ற அதிகாரி விஸ்வநாதன் உதவியோட, இந்த திட்டத்த செயல்படுத்த முயற்சிக்கிறோம். கோவையில ஒவ்வொரு போஸ்டல் பின்கோடு பகுதிக்கும், ஒரு மொபைல் மரச்செக்கு வாகனம் இயக்க வேணுங்கறதுதான் எங்க லட்சியம்.

ஒரு மொபைல் மரச்செக்கு வாகனம் மூலம் தினமும் 40 லிட்டர் எண்ணெய் அரைத்து தர்றோம். இதுக்கு நிலக்கடலை, கொப்பரை, எள் எல்லாம் மாசத்துக்கு 3 டன் தேவைப்படுது. இதனால, விவசாயிங்களுக்கும் விற்பனை கிடைக்குது. இது தொடர்பான யுடியூப் வீடியோவ லட்சக்கணக்கான பேர் பாத்திருக்காங்க. பிரதம மந்திரியோட அலுவலகத்துல இருந்து என்னை தொடர்புகொண்டு, ‘பிரதமர் மோடி எண்ணெய் அரைக்கும் சமூகத்தைச் சேர்ந்தவரு. அவர்கிட்ட இதைப்பத்தி சொல்லியிருக்கோம். அப்பாயின்ட்மென்ட் கிடச்சப்புறம் உங்கள தொடர்புகொள்றோம்’னு சொல்லியிருக்காங்க” என்றார் பெருமிதத்துடன்.

லாபத்த தேடிப் போகாதீங்க; லாபம் தேடி வரும்...

“புதிதாக தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “நான் தொழில் தொடங்கினதுக்கப்புறம் ஏமாற்றம், துரோகம், தோல்வினு எல்லாத்தையும் சந்திச்சேன். ஆனா, தைரியத்த மட்டும் கைவிடல.  இளைஞர்கள் வேலைக்குப் போகறது மட்டுமே லட்சியம்னு நெனக்காம, தொழில் தொடங்க முன்வரணும். அதேசமயம், பின்னடைவு ஏற்பட்டா கலங்கிவிடாமல், எதிர்த்து நின்னு போராடணும். மத்தவங்க லாபத்துல தொழில் செய்யும்போது, நம்மால முடியாதா? அதேமாதிரி, தரமான, தீங்கில்லாத பொருட்களத்தான் கொடுக்கணும். லாபத்தை மட்டுமே குறிக்கோளா வைக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். லாபத்தை தேடி நாம போகக்கூடாது. லாபம் நம்ம தேடி வரும். இந்த விஷயத்துல நான் முன்னோடியா கருதறது சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் சார. அவரைப் பார்த்ததில்ல. ஆனா, அவர்தான் என்னோட இன்ஸ்பிரேஷன்” என்றார் ராஜேஷ் நெகிழ்ச்சியுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x