Published : 09 Jan 2019 08:27 AM
Last Updated : 09 Jan 2019 08:27 AM

தடைக்கு பிறகும் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்பட்டு வரும் அம்மா குடிநீர்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு கண்டுகொள்ளுமா?

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 2.47 ஏக்கர் பரப்பில் 10.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து முக்கியப் பேருந்து நிலையங்களிலும் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையங்களில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டீல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரோடு ஒப்பிடும்போது இது மிகவும் விலை குறைவு என்பதால் மக்கள் மத்தியில் அம்மா குடிநீருக்கு அமோக வரவேற்பு உள்ளது.

ஆனால் அம்மா குடிநீரும் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அரசே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவிப்பதுபோன்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களின் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி, மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உட்பட 14 பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

இதனால் மைக்ரான் குறைவான நிலையில் உள்ள அம்மா குடிநீர் பாட்டிலுக்கும் சிக்கல் ஏற்படும் என பலரும் ஆரூடம் தெரிவித்தனர். ஆனால் வழக்கம்போல் பிளாஸ்டிக் பாட்டில்களிலேயே அம்மா குடிநீர் வருகிறது. அத்துடன் 12 பாட்டில்கள் சேர்த்து வழக்கம்போல் ஒரே பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்பட்டு பேருந்து நிலையங்களில் விற்பனைக்கு வந்து இறங்குகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்பட்டு வந்து இறங்கின.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அம்மா குடிநீர் பாட்டிலையே வேறு வடிவில் மாற்றுவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்யப்படுவதும் விரைவில் மாற்றப்படும்” என்றார்.

பிளாஸ்டிக் மீதான தடையை கண்காணிப்பதோடு ஆய்வுசெய்து அபராதமும் வசூலிக்கும் அரசு, போக்குவரத்து கழகத்தில் நடக்கும் இந்த தவறை உடனே கவனித்து சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x