Published : 07 Jan 2019 04:30 PM
Last Updated : 07 Jan 2019 04:30 PM
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் செய்தியாளர்கள் பலரும் தொடர் கேள்விகள் எழுப்பிய சூழலில் செய்தியாளர் சந்திப்பை விரைந்து முடித்தார்.
புதுச்சேரி ராஜ்நிவாஸில் செய்தியாளர்களை இன்று (திங்கள்கிழமை) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சந்தித்தார். அவர் செய்த சாதனைகள், ஆவணப்படங்களை திரையிட்டு அதிகாரிகள் அவரின் செயல்பாட்டை ராஜ்நிவாஸ் அதிகாரிகள் தேவநீதிதாஸ், ஸ்ரீதரன் ஆகியோர் புகழ்ந்து பேசினர்.
அதைத்தொடர்ந்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு கடந்த ஆண்டு 1,303 கோப்புகள் வந்து தீர்வு காணப்பட்டன. பல்வேறு தரப்பிலிருந்து 9,337 புகார்கள் மனுக்களாக வந்து தீர்வு காணப்பட்டதாக குறிப்பிட்டனர். சமூக வலைதளங்களான முகநூலில் 24.52 லட்சம் பேரும், ட்விட்டர் மூலம் 11.8 மில்லியன்பேரும் ஆளுநர் மாளிகை பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்தனர் என்றும் குறிப்பிட்டனர்.
அதைத்தொடர்ந்து கிரண்பேடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நீங்கள் விளம்பரத்துக்காகவே பணிகள் செய்வதாக முதல்வர் உள்பட பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன் ஆய்வு செய்த இடங்கள் நிலையும் மேம்படவில்லையே என்று கேட்டதற்கு, "எங்கள் பணி முதல்வருக்குத் தெரியவில்லை. ஆய்வு செய்த இடத்தை மீண்டும் ஆராய்கிறோம். தொடர் ஆய்வு செய்கிறோம். கடுமையாக வாரம் முழுக்க பணி செய்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
பொங்கல் பரிசு கோப்பு இழுபறி தொடர்பாக கேட்டதற்கு, "பொங்கல் பரிசு வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்தது. கடந்த ஆண்டு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. நிதியும் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டும் பயனாளிகளுக்கு ரொக்கமாக தர ஒப்புதல் தரப்பட்டது. அரசுக் கோப்பில் ஏழைகளுக்கு மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோப்பு உருவாக்கிஅதிகாரிகள், அமைச்சர், முதல்வர் வழியாக ஆளுநருக்கு வரவேண்டும். அதேபோன்றுதான் விளக்கமும் கேட்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
பொங்கல் பரிசு தொடர்பாக வந்த கேள்விக்கு சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸுடன் விவாதித்தே பதில் தந்தார். அமைச்சரவை முடிவு இதில் எடுத்துக்கொள்ளப்படவில்லையா என்று கேட்டதற்கும் பதில் தரவில்லை. அதையடுத்து இரு ஆண்டுகளில் புதுச்சேரிக்கு எவ்வளவு நிதி வாங்கி தந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு பட்ஜெட் நிதியைக் குறிப்பிட்ட கிரண்பேடியிடம் தொடர் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதையடுத்து அவர் கூறுகையில், "நான் வந்த பிறகு மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறப்பட்டது. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் புதுச்சேரிக்கு நிதி கிடைக்கும். தேர்தல் நடத்தாததால் எந்நேரமும் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
நிர்வாகி நானே என்று கூறும் நீங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்கு, "அரசுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
மாநில அந்தஸ்து தொடர்பாக உங்கள் கருத்து என்ன, "மாநில அந்தஸ்து விவகாரம் நாடாளுமன்றத்தின் முடிவாகும்" என்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் பலரும் கேள்விகள் எழுப்ப பலரை மீண்டும் கேள்விக்கேட்க கூடாது என்று குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து பலரும் கேள்விகளை எழுப்ப இறுதியில் செய்தியாளர் சந்திப்பை விரைந்து முடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT