Published : 14 Jan 2019 08:50 AM
Last Updated : 14 Jan 2019 08:50 AM
கண்ணாடிகளால் ஆன மேற்கூரைகள், சுழலும் சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் தயாராகும் ஊட்டி மலை ரயில் பெட்டிகள். வரும் கோடையில் பயன்பாட்டுக்கு வரும் என ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி மலை ரயில் 109 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே (27.4 கி.மீ.) பாதை அமைக்கப்பட்டது. கடந்த 1909-ம் ஆண்டு மலை ரயில் இயக்கப்பட்டது. ஆசிய கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதையும் மிகவும் செங்குத்தான மலைப்பாதையும் கொண்டது. இதில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயில் ஊட்டிக்கு இயக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்த நிலையில், 2018-19-ம் ஆண்டு முழுக்க பல்வேறு விதமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரயில் பெட்டியின் மேற்கூரை கண்ணாடி, நவீன பொழுதுபோக்கு அம்சங்கள், வை-பை வசதி போன்ற சிறப்பு வசதிகளுடன் நீலகிரி மலை சுற்றுலா ரயிலுக்கு பிரத்தேக பெட்டியை சுமார் ரூ.3 கோடி செலவில் தயாரிக்க ஐசிஎப்-க்கு ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, ஐசிஎப்-ல் ஊட்டி மலை ரயிலுக்கான சொகுசுப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக ஐசிஎப் உயர் அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் இருக்கக்கூடிய மிகச் சிறப்பான நான்கு மலை ரயில்களில் இதுவும் ஒன்று. மொத்தம் பயணிக்கும் 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 16 சுரங்கங்களையும் 250 பாலங்களையும் கடக்கிறது. இந்தியாவிலேயே பல் சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை இங்கு மட்டும் தான் இருக்கிறது.
இந்த மலை ரயிலுக்காக தற்போது, உலகச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 15 புதிய ரயில் பெட்டிகள் ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 4 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள பெட்டிகள் இன்னும் ஒரு மாதத்தில் தயாரிக்கப்படும். இந்தப் பெட்டிகள், உள்பகுதியில் மரச்சாமான்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். சுழலும் சொகுசு இருக்கைகள், பாதுகாப்பு குறிப்புகளை தெரிவிப்பதற்காக எல்இடி திரைகள், வை-பை வசதி, தேனீர், காபி பானங்களுக்கான தானியங்கி இயந்திரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெறும். வரும் கோடையில் ஊட்டி மலை ரயிலில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT