Published : 25 Jan 2019 11:16 AM
Last Updated : 25 Jan 2019 11:16 AM
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தரும் தண்ணீரை விட லட்சத்தீவில் தரப்படும் கடல் சுத்திகரிப்பு தண்ணீர் நன்றாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
புதுச்சேரி கடற்கரையில் தேசிய கடல்வளத்துறைத் தொழில்நுட்பக் கழகம் சார்பில் ரூ.25 கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை மணற்பரப்பு மறு சீரமைப்பு திட்டத்தை வியாழக்கிழமை இரவு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அர்ப்பணித்து பேசியதாவது:
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடித்துள்ளது. 2004-ல் சுனாமி வந்தபோது இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், 2019-ல் சுனாமி வருவதை துல்லியமாக கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்ட 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜப்பான் விடுத்த சுனாமி எச்சரிக்கை கூட தவறாக இருந்துள்ளது.
ஆனால், இந்தியா விடுத்த சுனாமி எச்சரிக்கை அறிவிப்புகள் இதுவரை தவறியதில்லை. புயல் உள்ளிட்ட வானிலை அறிவிப்புகளை வெளியிடுவதில் உலக அளவில் 4-வது சிறந்த நாடாக இந்தியா உள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் புதுச்சேரியில் நவீன தொழில்நுட்பம் மூலம் செயற்கை கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே முன்மாதிரியான தொழில்நுட்பமாக விளங்கும்.
2030-ல் உலக அறிவியல் வல்லரசு நாடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா நிச்சயம் வந்துவிடும். லட்சத்தீவில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு குடிநீர் தரப்படுகிறது. இதை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த நிதி போதாது. டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வழங்கும் குடிநீரை விட லட்சத்தீவில் வழங்கப்படும் கடல் சுத்திகரிப்பு குடிநீர் நன்றாக உள்ளது’’ என பேசினார்.
இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT