Published : 10 Sep 2014 09:57 AM
Last Updated : 10 Sep 2014 09:57 AM
போலீஸாரின் சியூஜி போன் நம்பர்களை ஒருங்கிணைத்து உடனடியாகத் தெரிந்துகொள்ளும் வசதியுடைய புதிய ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் சாஃப்ட்வேரைச் சிவகங்கை எஸ்பி அலுவலகத் தொழில்நுட்பப் பிரிவு தலைமைக் காவலர் ரா.செந்தில்குமார் உருவாக்கியுள்ளார். இவரது முயற்சிக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், இவரது உருவாக்கத்தில் உருவான அப்ளிகேஷன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸார் சியூஜி நம்பர்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் முதல் அமைச்சுப் பணியாளர்கள் வரை இலவச அழைப்பில் தொடர்புகொள்ளும் வகையில் பிஎஸ்என்எல் மூலம் 1.25 லட்சம் சியூஜி சிம்கார்டுகள் வழங்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. அந்தந்த மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளின் மொபைல் எண்களை அந்தந்த மாவட்ட போலீஸார் மட்டும் போனில் பதிவுசெய்து வைத்திருப்பார்கள். அடுத்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் நம்பர்களையோ, ஸ்டேஷன் நம்பர்களையோ, போலீஸ்காரர்களின் நம்பர் களையோ தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அடுத்த மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்புகொண்டுதான் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுவது வழக்கம்.
இதனைத் தவிர்க்கவும், விரைவாகத் தெரிந்துகொள்ளவும், விரல் சொடுக்கும் நேரத்தில் ஆண்ட்ராய்டு போன் மூலம் தெரிந்துகொள்ளும் புதிய ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் சாஃப்ட்வேரை, சிவகங்கை எஸ்பி அலுவலகத் தொழில்நுட்பப் பிரிவு தலைமைக் காவலர் ரா.செந்தில்குமார் உருவாக்கியுள்ளார்.
இந்த அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் காலதாமதமின்றி விரைந்து தெரிந்துகொள்ளும் வசதியை இவர் ஏற்படுத்தித் தந்துள்ளார். இந்த வசதி மூலம் மாவட்டத்தின் எந்த மூலையில் உள்ள போலீஸார் முதல் அதிகாரிகளின் நம்பர் வரை உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம். இதில் பெயர் தெரிந்து நம்பர் தெரியாவிட்டாலும், நம்பர் தெரிந்து பெயர் தெரியாவிட்டாலும், இந்த அப்ளிகேஷனில் டைப் செய்து தேடிப்பிடிக்கும் வசதி உள்ளது.
இதுபற்றி தலைமைக் காவலர் செந்தில்குமார் கூறியதாவது:
‘‘சிவகங்கை எஸ்பி அஸ்வின்முகுந்த்கோட்னீஸ், மற்ற ஸ்டேஷன் நம்பர்கள், இன்ஸ்பெக்டர், எஸ்ஐ-க்கள் நம்பரை உடனடியாகப் பெற எளிய வழிமுறைகள் ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டறிந்தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் சாஃப்ட்வேரை உருவாக்கினேன். இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீஸாரின் பெயர் அல்லது மொபைல் எண்ணை எளிதில் தெரிந்துகொள்ளலாம். இதற்கு மொபைலில் நெட் வசதி தேவையில்லை. ஆப்லைனில் இது நன்றாகவே செயல்படும்.
நம் மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் முதல் அமைச்சுப் பணியாளர் வரை இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகின்றனர்’’ என்றார்.
இவரது முயற்சிக்கு, உருவாக் கத்துக்கு தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபி கந்தசாமி, சிவகங்கை எஸ்பி அஸ்வின் முகுந்த்கோட்னீஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இவரது உருவாக்கத்தில் உருவான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸாரின் எண்களை ஒருங்கிணைக்கும் பணியும் அந்தத் தொழில்நுட்பப் பிரிவில் நடைபெற்றுவருகிறது. இதன்மூலம் மாநிலத்தில் உள்ள எந்தக் காவல் நிலைய எண்ணையும், சம்பந்தப்பட்ட போலீஸாரின் எண்ணையும் இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT