Published : 29 Jan 2019 01:07 PM
Last Updated : 29 Jan 2019 01:07 PM
பெற்றோர் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கேரள ஆசிரியை மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரால் மீட்கப்பட்டார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் கடினம்குளத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். இவர் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவரது மகள் ஆன்சி ஆண்ட்ரூஸ் (21). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அபுதாபியில் (துபாய்) வேலை செய்து வரும் இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் இவர்களது காதலுக்கு அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. இளைஞர் வீட்டில் வசதி குறைவு என்ற காரணத்தைக் கூறி, காதலைக் கைவிடுமாறு ஆன்சியை அவரது பெற்றோர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காதலைக் கைவிட மனமின்றி பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னை சென்றுவிட்டார் ஆன்சி. இது தொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கேரள போலீஸார் பெண் மாயம் என, வழக்குப் பதிவு செய்து ஆன்சியைத் தேடினர்.
இது பற்றி கேரள போலீஸார் சென்னை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். காணாமல் போன ஆசிரியை ஆன்சியின் செல்போன் உரையாடல் கண்காணிக்கப்பட்டது.
இதன்படி, ஜன., 28-ம் தேதி சென்னையிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆன்சி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுரை ரயில்வே போலீஸாருக்கு சென்னை ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுரை ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் தலைமையில் மதுரை இரவுப் பணி எஸ்ஐ சிராஜூதீன் சிறப்பு எஸ்ஐ ஜெயசீலன், தலைமைக் காவலர் நெப்போலியன் உள்ளிட்டோர் வைகை ரயிலில் இறங்கிய பயணிகளைக் கண்காணித்தனர். அப்போது கேரள போலீஸாரால் தேடப்படும் ஆன்சியை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதன்பின், பெண் காவலர்கள் சுதா, ராணி பாதுகாப்பில் உயர் வகுப்பு பயணிகளுக்கான அறையில் ஆன்சி தங்க வைக்கப்பட்டார். அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது உறவினர்களுடன் மதுரை ரயில் நிலையம் வந்தார். அவரிடம் பாதுகாப்பாக ஆன்சியை போலீஸார் ஒப்படைத்தனர். காணாமல் போன வெளிமாநில ஆசிரியை கண்டுபிடித்து ஒப்படைத்த மதுரை ரயில்வே போலீஸாரை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT