Published : 31 Jan 2019 10:14 AM
Last Updated : 31 Jan 2019 10:14 AM

வலிமையை உணர்த்தும் கொமதேக மாநாடு!- 26 நாடுகளில் இருந்து வரும் கொங்கு தமிழர்கள்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் பல்வேறு கட்சிகளும் அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதுடன், தங்கள் வலிமையைக் காட்டவும் முயற்சித்துவருகின்றன. இதையொட்டி, நாமக்கல்லில்  பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் உலக கொங்கு தமிழர் மாநாட்டுக்காக கொங்கு மண்டலத்தை தயார்படுத்தி வருகிறது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் இந்த மாநாட்டை, பிரதான அரசியல் கட்சிகள் உற்று நோக்குகின்றன. அரசியல் கட்சிகளின் வழக்கமான மாநாடுபோல  தோழமைக் கட்சிகளை மட்டும் அழைக்காமல், ஆளுங்கட்சி உள்பட அனைத்துக் கட்சியினருக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது கொமதேக.

பரபரப்பான மாநாட்டுப் பணிகளுக்கிடையே கொமதேகவின் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனை சந்தித்தோம்.

உலக கொங்கு தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன?

கொங்கு மண்டலத்திலிருந்து சென்றவர்கள்,  உலகின் பல்வேறு நாடுகளிலும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தினால், கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் என பல துறைகளிலும் நமது இளைஞர்களுக்கு நன்மைகள் நடக்கும். இதற்காக, கொமதேக சார்பில் முதல் உலக கொங்கு தமிழர் மாநாடு மலேசியாவில் 2016 ஜூலையில் நடந்தது. மலேசிய பிரதமர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கொங்கு மண்டலத்திலிருந்து சென்று பல்வேறு பகுதிகளில் வாழும், 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை உலக கொங்கு தமிழர் மாநாட்டை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

வரும் பிப்ரவரி 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் இரண்டாவது மாநாட்டில் 26 நாடுகளில் வசிக்கும், 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் தொழில் தொடங்க, வேலை செய்வதற்காக சென்றவர்கள். இவர்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  அதிகம் என்பதால், அங்கு மாநாட்டை நடத்துகிறோம்.

இந்த மாநாட்டில் கொங்கு பகுதி மக்கள் சந்தித்துக்கொள்வது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாய் இருக்கும். சமுதாய ஒற்றுமையை வெளிப்படுத்தும். இதன் மூலம், மற்றவர்களுக்கு கூடுதலாக உதவி செய்யும் எண்ணம் ஏற்படும்.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் மாநாடு நடத்தாமல், சமுதாய மாநாடு நடத்துகிறீர்களே?

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக மட்டுமே நடத்தப்படும் இயக்கம் அல்ல. எதிர்காலத் தலைமுறைக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டுமென்பதே எங்கள் இலக்கு. தேர்தல் நேரத்தில், அதற்கான வேலைகளை  செய்கிறோம். மற்ற நேரங்களில்,  இளைஞர்களுக்கு  கல்வி, தொழில் என முன்னேற்றப்பாதையில்  செல்ல எப்படி உதவ முடியும் என்று பார்க்கிறோம். ‘கலாச்சாரப் பாதுகாப்புக் கூட்டம்’ என்ற பெயரில் தொடர்ந்து இளைஞர்களையும், சமுதாய மக்களையும் இணைத்து, ஆரோக்கியமான பாதையில் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்வது குறித்து பேசுகிறோம். அரசியல் மேடையில், நான்கு கட்சிகளை விமர்சித்தால் மட்டுமே நாங்கள் தேர்தலுக்குத்  தயாராகிறோம் என்று சொல்ல முடியாது. நாங்கள் வலிமையாக இருக்கிறோம். அதை பிரதான கட்சிகள் புரிந்து கொள்ள வில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. எனவே, வலிமையைக் காட்டவே இந்த மாநாடு நடக்கிறது.

திமுக கூட்டணியில் கொமதேக தொடர்கிறதா?

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அமைவதுதான் கூட்டணி. அதுவரை தோழமைதான். தற்போது தோழமை தொடர்கிறது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் சொல்ல முடியும். திமுக தலைமையுடன் எனக்கு எந்த நெருடலும் இல்லை. திமுக தலைவராக பொறுப்பேற்றபின்பு, முன்பு இருந்ததைவிட அதிக நட்புடன் பழகுகிறார் ஸ்டாலின்.

உங்களுடன் கொள்கை அளவில் முரண்பாடு கொண்ட விடுதலைச் சிறுத்தைகள், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதே?

கூட்டணிக்கு நாங்கள் தலைமை ஏற்கவில்லை. நம் வீட்டுத் திருமணத்தில், யார் யாரை அழைக்கலாம் என்பதை நாம் முடிவு செய்ய முடியும். இன்னொருவர் வீட்டு கல்யாணத்துக்குப் போகும்போது, நான் வரவேண்டும் என்றால், அங்கு வேறு  யாரும் வரக்கூடாது என்று சொல்லமுடியுமா? அதுபோலத்தான் இதுவும். மேலும், நீங்கள் சொல்பவர்கள், கடைசி நேரத்தில் எந்தக்  கூட்டணியில் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாதே!

திமுக உடனான தோழமை, கூட்டணியாக மாறுமென உறுதியாகச் சொல்ல முடியுமா?

கூட்டணி இரு தரப்பும் சம்மந்தப்பட்டது என்பதால், தேர்தல் நேரத்தில் பேசுவதைப் பொறுத்தே முடிவு இருக்கும். இப்போது அதை சொல்ல முடியாது.

கொமதேக மீது ஜாதிக்கட்சி என்ற முத்திரை தொடர்கிறதே?

கொங்கு மண்டலத்தில் ஒரு இயக்கத்தில் கவுண்டர்கள் அதிகமாகத்தான் இருப்பார்கள். இது எல்லாக் கட்சிக்கும் பொருந்தும்.  நாங்கள் என்றுமே தனிப்பட்ட தலைவர்களையோ, கட்சியையோ விமர்சித்து அரசியல் செய்தது இல்லை. கல்வி, மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு என எங்களை நாடி வருபவர் யாராக இருந்தாலும், உதவி செய்து வருகிறோம். எந்த ஜாதியும் எங்கள் மீது வெறுப்பு காட்டுவதில்லை. நாங்கள் வெற்றி பெறும்போது மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்வோம்.

நாமக்கல் மாநாட்டில் அரசியல் நிலைப்பாடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுமா?

நாமக்கல் மாநாட்டில் அரசியல் சார்ந்த தீர்மானங்கள், முடிவுகள் கண்டிப்பாக எடுக்கப்படும். கொங்கு மண்டலத்தை மையப்படுத்தி, வளர்ச்சிக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அரசியல் நிலைப்பாடு, கூட்டணி ஆகியவை கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்திதான் அமையும். அவிநாசி அத்திக்கடவு, திருமணிமுத்தாறு, ஆனைமலையாறு- நல்லாறு, மேட்டூர் உபரிநீர் திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. விளை  பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. கொங்கு மண்டலத்தில் அனைத்து  தொழில்களும் நலிவடைந்துள்ளன. ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தொழில் விரிவாக்கம் என்பது இல்லாமல், முடங்கிப்போயுள்ளது. தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை உடனடியாகத் தேவை.

நதிநீர் இணைப்பு, ஜவுளித்தொழில் நசிவு, சுங்கக் கட்டணம், டீசல் விலை உயர்வால், லாரித் தொழிலுக்கு கடும் பாதிப்பு என,  மக்களவைத் தேர்தல் மூலம் தீர்வுகாண வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. இந்தப்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதி அளிப்பவர் களுடன்தான் கொமதேக கூட்டணி அமைக்கும்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருக்கும்போது,  இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்த எளிதாக அணுக முடியுமே?

நீங்கள் சொல்வது சரி. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதல்வரை எளிதில் அணுக முடியும். ஆனால், பணிகள் நடக்கவேண்டுமே. இவர் ஒருவர் மட்டுமே முடிவுகளை எடுத்து விட முடியாத நிலை இருக்கிறது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கிறார் என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அவர் பெரிய தலைமையின் வாரிசு அல்ல. சாதாரண மனிதராய் இருந்து தமிழக முதல்வராக மாறியுள்ளார். சசிகலா குடும்பத்தினர்தான், தற்போதைய முதல்வரை உருவாக்கினர். அவர்கள் சொல்வதைத்தான் இவர் கேட்பார்  என்பதால் அவரை எதிர்த்தோம். அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய பின், தற்போது சுதந்திரமாக கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்; முடிவுகளை எடுக்கின்றனர். அதிமுகவில் இப்போது ஜனநாயகம் இருக்கிறது. தற்போது தனி மனிதராய் அந்தக்  கட்சியில் யாரும் முடிவு எடுத்துவிட முடியாது. இதை பாசிட்டிவாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கட்சி தொடங்கி 10 ஆண்டுகளாகியும் தேர்தல் வெற்றி கிடைக்காத நிலையில், நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்களா?

தேர்தல் தோல்வி என்பது எங்களை எப்போதும் பாதித்ததில்லை. 2016 மே மாதம் சட்டசபைத் தேர்தலில் 72 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தோம். இரு மாதம் கழித்து ஜூலையில் மலேசியாவில் கொமதேக நடத்திய உலக கொங்கு தமிழர் மாநாட்டில் 10 விமானங்களில் இங்கிருந்து 2000 பேர் சென்று பங்கேற்றோம். எந்தக் கட்சி வெளிநாட்டில் மாநாடு நடத்தி, இவ்வளவு பேர் பங்கேற்று இருக்கிறார்கள்? தேர்தலில் தோற்ற இரண்டாவது மாதம் இது நடந்தது.

தேர்தலில் வெற்றி கிடைத்தால், தற்போதைய பணிகளை  அங்கீகாரத்துடன் செய்ய முடியும். தோல்வி என்றாலும் தொடர்ந்து எங்கள் இலக்கை நோக்கிப் பயணிப்போம். எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனரா என்பதை பிப்ரவரி 3-ம் தேதி நடக்கும் நாமக்கல் மாநாட்டிற்கு வந்து பாருங்கள்!

கட்சியின் எதிர்காலம் `தீரன் படை’

“கொங்கு நாட்டு இளைஞர்கள்  10 ஆயிரம் பேரைக்கொண்டு `தீரன் படை` என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இவர்கள்தான் கட்சியின் எதிர்காலம். மாநாட்டுப் பணியிலும், தேர்தல் பணியிலும் இவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். இவர்களை அடிக்கடி நான் சந்திக்கிறேன். மாநாட்டுக்காக  அவர்கள் திண்ணைக் கூட்டங்கள் போட்டு,  லட்சக்கணக்கானவர்களை சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். தீரன் படையில் உள்ள ஒவ்வொருவரும் 100 பேருக்கு சமம் என்ற வகையில், இவர்களிடம் சேர்க்கும் தகவல் 10 லட்சம் பேருக்கு உடனே சென்று சேர்ந்து விடுகிறது” என்றார்  ஈ.ஆர்.ஈஸ்வரன் பெருமிதத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x