Published : 18 Jan 2019 09:07 AM
Last Updated : 18 Jan 2019 09:07 AM
ஒரு கண்ணில் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழில் 30 சதவீதம் வரை மட்டுமே மாற்றுத்திறன் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுவதால் சலுகைகளை பெற முடியாமல் பார்வையற்றவர்கள் பரிதவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனுக்கான சதவீதத்தை மருத்துவர்கள் குறிப்பிட்டு அளிக்கப்படும் சான்றிதழ் அடிப்படையில், அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 40 சதவீதம் மாற்றுத்திறன் அடைந்தவர்களுக்கு மட்டுமே மூன்று சக்கர வாகனம், இரு சக்கர வாகனம், உதவித்தொகை உள்ளிட்ட அரசு சலுகைகளை பெற முடியும். ஒரு கால், கை உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம் மாற்றுத்திறன் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், ஒரு கண் பார்வையை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை மட்டுமே மாற்றுத்திறன் இருப்பதாக சான்று அளிக்கின்றனர். சரியான பதில் இல்லைஇதனால், அரசின் பல்வேறு சலுகைகளை பெற முடியாமல் பார்வையற்றவர்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் சரியான பதில் தெரிவிப்பதில்லை. இதனால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பரிதவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, ஊதுபத்தி வியாபாரம் செய்துவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சண்முகம் என்பவர் கூறும்போது, ‘‘20 முதல் 30 சதவீதம் வரை மாற்றுத்திறன் என்று குறிப்பிடுவதால் கருப்பு கண்ணாடி, ஊன்றுகோல் உட்பட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் எந்த ஒரு சலுகையையும் பெற முடியவில்லை. இதனால், தேசிய அடையாள அட்டை இருந்தும் பயனில்லை. அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அலட்சியத்தால் பரிதவித்து வருகிறோம்’’ என்றார். இதுதொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஒரு கண் பார்வை இழந்தவர்களுக்கு 40 சதவீதத்துக்கு குறைவாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்குவதாக பாதிக்கப்பட்டவர் முறையிட்டால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT