Published : 04 Jan 2019 08:14 AM
Last Updated : 04 Jan 2019 08:14 AM
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் தங்களது பிரச்சார வியூகங்களை திட்டமிடுவதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
மும்முனைப் போட்டிதிருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் ஜன.28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எத்தனை கட்சிகள், வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளிடையேதான் பிரதான போட்டி இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
திமுகவைப் பொறுத்தவரை, இந்த தொகுதியின் தொடர் வெற்றி வரலாறு, திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திருவாரூரை மாவட்டத் தலைநகராக அறிவித்தது, மத்தியப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தொடங்கியது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை பிரச்சாரத்தில் முன்வைக்க திமுக வியூகம் அமைத்து வருகிறது.
அதிமுகவில் இருந்து அமமுக பிரிந்திருப்பது, மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் விதமாக பிரச்சாரத்தை முன்னெடுக்க திமுக தயாராகி வருவதாகக் கூறுகின்றனர் அக்கட்சியினர். திமுகவுக்கு கிடைக்கும் வாக்குகளுடன் கணிசமாக உள்ள கூட்டணிக் கட்சியினரின் வாக்குகளும் கிடைக்கும் என்பதால் வெற்றி உறுதி என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
அதிமுகவைப் பொறுத்தவரை, கடந்த 2 முறை திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற கருணாநிதி, தனது சட்டப்பேரவை உறுப்பினருக்கான பொறுப்புகளை முறையாக மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு வாக்களித்தால், அது தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பெற்றுத்தரும் என்பதையும் தங்களது பிரதான பிரச்சாரமாக முன்னெடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதுதவிர கஜா புயல் நிவாரணப் பணிகள், நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள், அரசின் சாதனைத் திட்டங்கள் ஆகியவற்றையும் மக்கள் மத்தியில் முழு அளவில் கொண்டு செல்லவும் அதிமுக முடிவு செய்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் மட்டுமல்லாது, இளைஞர்களும், நடுநிலையாளர்களும் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்று தொடர்ந்து கூறிவரும் அமமுக, ஆர்.கே. நகரில் பெற்ற வெற்றியைப் போன்றே இந்த இடைத்தேர்தலிலும் வெற்றியை தங்கள் வசமாக்கிட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது. அதிமுக ஆட்சியின் மீதான அதிருப்தி, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவற்றை முன்வைத்து தங்களது பிரச்சார வியூகத்தை தினகரன் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் வகுத்து வருகின்றனர்.
முன்னோட்டமான தேர்தல்பிரதான கட்சிகளின் இந்த வியூகங்கள் அனைத்துமே, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதால், இன்னும் தீவிரமான பிரச்சாரத் திட்டங்களை மேற்கொண்டு வெற்றிக்கான வியூகங்களை வகுப்பதில் இக்கட்சிகள் மேலும் கவனம் செலுத்தி வாக்குகளைப் பெற முயற்சிக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டுமே தற்போது தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT