Last Updated : 17 Jan, 2019 03:29 PM

 

Published : 17 Jan 2019 03:29 PM
Last Updated : 17 Jan 2019 03:29 PM

தமிழக கிராமப்புற 5-ம் வகுப்பு மாணவர்கள் 59 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடத்தை படிக்க இயலவில்லை: ஆய்வில் தகவல்

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு பயிலும் 59 சதவீதம் மாணவர்கள், 3-ம் வகுப்பு பயிலும் 89 சதவீத மாணவர்கள் 2-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்று ஆண்டு கல்வி அறிக்கை 2018-ல்(ஏஎஸ்இஆர்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட அறிக்கையில், திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கிராமப்புறங்களில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 50 சதவீதம் பேர் 2-ம் வகுப்பு பாடங்களைப் படிக்க சிரமப்படுகின்றனர். 2-ம் வகுப்பு பிலும் 96 சதவீத மாணவ, மாணவிகள் தங்களுக்கு உரிய பாடங்களை தெளிவாகப் படிக்க முடியாமல் இருக்கிறார்கள்.

பிரதம் கல்வி அமைப்பு சார்பில் ஆண்டு கல்வி அறிக்கை 2018 தயார் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 20 ஆயிரத்து 435 மாணவர்களிடம்  படிக்கும் திறன், கணிதப்பாடங்களில் கணக்குளை தீர்வு செய்யும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து பிரதம் கல்வி அமைப்பின் மாநிலத் தலைவர் டி. ஆலிவர் கூறியதாவது:

''தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் மத்தியில் சாதகமான முன்னேற்றம் பள்ளிக்கூடத்துக்கு தவறாமல் வருவதில் காணப்படுகிறது. தமிழக பள்ளிக்கூடங்களில் உள்ள வசதிகள் தேசிய அளவில் வகுக்கப்பட்டு மாணவர்களுக்கான சராசரி வசதிகளைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் 10 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திய நிலையில், 2018-ம் ஆண்டில் இது 2.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது தேசிய அளவில் 15 முதல் 16 வயதுடைய பருவத்தினர் 13 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைக் கைவிடுகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவில், ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி கற்றலின் திறன் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு பயிலும் 59 சதவீதம் மாணவர்கள், 3-ம் வகுப்பு பயிலும் 89 சதவீத மாணவர்கள் 2-ம் வகுப்பு பாடப்புத்தகங்களைப் படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிக்கூடம் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வாசிக்கும், கணிதம் போடும் திறன் மாறுபட்டு அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களில் 72.9 சதவீதம் பேருக்கு 5-ம் வகுப்பு கணிதத்தில் வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடியவில்லை. இந்த அளவீடு தனியார் பள்ளிகளில் அதிகமாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் 77 சதவீத மாணவர்களால் கணிதத்தைச் செய்ய முடியவில்லை.

அரசுப் பள்ளிகளில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களில் 53.7 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடங்களை வாசிக்க முடியவில்லை. இது தனியார் பள்ளிக்கூடங்களில் 71.2 சதவீதமாக இருக்கிறது''.

இவ்வாறு ஆலிவர் தெரிவித்தார்.

சமகல்வி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்துராஜ் கூறுகையில், ''செயல்பாட்டு முறையிலான கற்றலின் முறையைப் பள்ளிக் கல்வித்துறை ஊக்குவிப்பது நல்ல விஷயம். ஆனால், இதை அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். பாடப்புத்தங்களைக் தவிர்த்து, பல்வேறு வெளிவிஷயங்களில் இருந்து மாணவர்களுக்கு சில பள்ளிகள் கற்றுத் தருகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x