Published : 05 Dec 2018 03:18 PM
Last Updated : 05 Dec 2018 03:18 PM
சமுதாயத்தில் ஒருபிரிவினருக்கு இணக்கமாக நடந்து கொள்வதும், மற்றொரு பிரிவினரை ஒதுக்குவதும் மதச்சார்பின்மை அல்ல என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கருதினார். தனது கருத்தை அவர், டெல்லியில் நடைபெற்ற தேசிய மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் வெளிப்படுத்தியிருந்தார்.
ஜெயலலிதாவின் உரையை கடந்த அக்டோபர் 30, 2013-ல் மாநிலங்களவை அதிமுக அவை தலைவராக இருந்த எம்.தம்பிதுரை அந்த மாநாட்டில் வாசித்திருந்தார். அதன் சுருக்கம் பின்வருமாறு:.
''இந்தியக் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும், அரசியலிலும் அனைத்து மதங்களின் சகிப்புத்தன்மை என்பது முக்கியமானதாக இருந்து வருகிறது. ‘சர்வ தர்ம சம்பாவ’(அனைத்து மதங்களையும் சமதாக பாவித்தல்) என்று வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
அர்த்தசாஸ்திரத்தில் அரசியலுக்கும் மதத்துக்கும் இடையே உள்ள கோடு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியலை தனியானதொரு அறிவியலாக கௌடில்யர் கூறியுள்ளார். இந்தியர்களின் மதச்சார்பின்மை 1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்களும், இந்துக்களும் இணைந்து போராடியபோதே வெளிப்பட்டது.
இந்த உணர்வை நாட்டில் நாம் மீண்டும் தூண்டிவிட வேண்டும். நமது நாட்டின் அரசியல் சட்டத்தில் மதச்சார்பின்மை 42-வது திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது. இவ்வாறு ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் இருந்த பண்பாடு இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியாவில் மதவாதம் அதன் ஆபத்தான கரங்களைப் பரப்பி வருகிறது. இதனால் மத மோதல்களும், மத அடிப்படையிலான அரசியல்களும், மதவாத சக்திகளும் நமது அரசியலில் தலைதூக்கியுள்ளன.
இந்திய அரசும், பல நேரங்களில் சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் கோரிக்கைகளின் நிர்பந்தத்திற்குப் பணிந்தது. இது, இரு சாரார்களையும் ஊக்கமளித்துள்ளது. பிரித்தாள்வது, பாகுபடுத்துவது, மோதல் போக்கு ஆகியவற்றில் மிகுந்த ஆபத்து உள்ளது. இவற்றை ஒழிக்க உண்மையான மதச்சார்பின்மையை நாம் கடைபிடிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT