Published : 01 Dec 2018 12:01 PM
Last Updated : 01 Dec 2018 12:01 PM

மத்திய அரசின் புதிய அறிவிப்பு: கார்ப்பரேட்களுக்காக மக்களைக் கொல்லவும் தயாராகிறதா பாஜக அரசு? - வேல்முருகன் கண்டனம்

மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பால், கார்ப்பரேட்களுக்காக மக்களைக் கொல்லவும் பாஜக அரசு தயாராகிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி நிகழ்ந்தாலும் சுற்றுச்சூழலை சீரழிக்கும் அரசின் கொள்கைகள், திட்டங்களால், மக்களின் வாழ்வாதார நெருக்கடி அதிகரித்தபடி தான் உள்ளது; நாமும் நாளைய நமது சந்ததியும் வாழத் தகுந்த பூமியாக இது இருக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக முக்கியம்.

இதனை ஐநா சபை நாடுகளுக்கு வலியுறுத்துகிறது; அதற்கென சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களையும் வகுத்திருக்கிறது. அந்த சட்டங்கள், பேரழிவுத் திட்டங்களைத் திணித்து மக்களையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்துவிடாதபடி தடுப்பதாக உள்ளன. ஆனால் நாடுகள் அதனை மீறவும் செய்கின்றன.

அப்படித்தான் சூழலியல் சட்டத்தை மீறி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் ஓர் அறிவிப்பை செய்திருக்கிறது. அதன்படி, எந்தவொரு தொழிற்திட்டத்தையும் தொடங்க இனி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை;மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி ஒன்றே அதற்குப் போதும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இது நம் அரசமைப்பு சட்டத்தில் உள்ள சூழலியல் கோட்பாடுகளுக்கும் சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கும் எதிரானதாகும்; ஒரு சாதாரண அறிவிப்பின் மூலமே மக்களின் வாழ்வுரிமையை, அவர்களது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும்; நாட்டின் அரசமைப்பு சட்டத்தையே அவமதிப்பதாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, மக்கள் பங்கேற்புக் கோட்பாடு மற்றும் நீடித்த வளர்ச்சிக் கோட்பாடு மிக மிக முக்கியம்; அதனை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என ஐநா கூறுகிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக, கார்ப்பரேட்களின் பங்கேற்பையும் அவர்களின் நீடித்த வளர்ச்சியையுமே கணக்கில் கொண்டு செயலாற்றுகிறது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு.

நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற திட்டங்கள் கார்ப்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகளை வாரி வழங்கும்; ஆனால் மக்களுக்கு பேரழிவினைத்தான் கொண்டுவரும். இதனால் இந்த திட்டங்களை மக்கள் எதிர்க்காமல் வேறென்ன செய்வார்கள்? அதனால்தான் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி என்பது அவசியமற்றதாக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் தாக்கீது அறிவிக்கை 2006-ன்படி, மாநில சுற்றுச்சூழல் அனுமதியும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதியும் முதலில் பெற வேண்டும். இந்த இரண்டையும் பெற்ற பிறகு,மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றால்தான் தொழிற்திட்டத்தைத் தொடங்க முடியும். அதன் பிறகும், அந்த திட்டம் தொடர்ந்து இயங்க ஆண்டுக்கு ஒருமுறை அனுமதியை புதுப்பிக்க வேண்டும். தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி என்று அதற்குப் பெயர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இதில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், அது மக்களோடு நேரடித் தொடர்புடையதாக இருப்பதுதான். அதுதான் ஜனநாயகமும் கூட. ஜனநாயகம் என்பது கீழிருந்து அதாவது மக்களிடமிருந்துதானே மேலெழும்ப வேண்டும். ஆனால் ஜனநாயகத்தை தலைகீழாக்கி அதாவது ஜனநாயகத்தையே மறுத்து, மேலிருந்து தனது ஃபாசிசத்தை, பேரழிவை மக்கள் மீது திணிக்கிறது பாஜக அரசு.

அதனால்தான் மாநிலத்திடம் இருக்கும் அந்த உரிமையை பறிக்க முடிவு செய்து, இனி மத்திய சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் அனுமதிஒன்றே போதும்;மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழிற்திட்டம் தொடங்குவதற்கான அனுமதி தேவையில்லை என்று வந்திருக்கிறது மத்திய அரசு.

இதன்மூலம், கார்ப்பரேட்களுக்காக மக்களைக் கொல்லவும் தயாராகிறது மத்திய பாஜக அரசு  என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

பேரழிவுத் திட்டங்கள் உள்பட தொழிற்திட்டங்கள் எதற்கும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி தேவையில்லை என்பது வாக்களித்து அதிகாரம் வழங்கிய மக்களையே அழிக்கத் தயாராவதன்றி வேறென்ன?

மக்களின் வாழ்வுரிமையையும் பறிக்கும் இந்த சட்டவிரோத சர்வாதிகாரத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக இதனைத் திரும்பப்பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கிறது.

இதில் மாநில உரிமையை நிலைநாட்டிட உடனடி நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும்" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x