Published : 26 Dec 2018 02:03 PM
Last Updated : 26 Dec 2018 02:03 PM
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்` என்ற அடையாளத்தை கோவைக்குத் தேடித்தந்த பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது என்று குற்றம் சுமத்துகின்றன தொழிற்சங்கங்கள்.
"இந்தப் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு என்ன?” என்பதே மில்லியன் டாலர் கேள்வி.இந்தியாவைப் பொருத்தவரை வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஜவுளித் துறை கொடிகட்டிப் பறந்தது. வேலைவாய்ப்பிலும் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, ஜவுளித் துறையே தொழிலாளர்களுக்கு கைகொடுத்தது. தென்னிந்தியாவில் கோவை ஜவுளித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கொண்ட பகுதியாக மாறியதால் `தென்னிந்தியாவின் மான்செஸ்டர்` என்ற பெருமை கிடைத்தது.
கோவையில் எப்போதும் மிதமான தட்பவெப்பநிலை இருக்கும். பருத்தியை பஞ்சாக மாற்றிய பின், நூலாக நூற்பதற்கு இந்த தட்பவெப்பநிலை மிகவும் ஏற்றது. மேலும், இங்கு கிடைத்த திறன் வாய்ந்த தொழிலாளர்கள், கோவையைச் சுற்றிலும் கிடைத்த பருத்தி, சாலை, ரயில் போக்குவரத்து வசதி, தடையின்றிக் கிடைத்த மின்சாரம் ஆகியவை ஜவுளித் தொழில் வளர முக்கியக் காரணங்களாகும்.
1888-ல் ஐரோப்பாவைச் சேர்ந்த சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவரால் தொடங்கப்பட்ட கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்தான் கோவையில் தொடங்கப்பட்ட முதல் பஞ்சாலையாகும். இதை `ஸ்டேன்ஸ் மில்` என்று அழைப்பர். பின்னர் இந்த ஆலையின் உரிமை பல்வேறு தரப்புக்கு மாறியது. தொடர்ந்து சில நூற்பாலைகள் உருவாகின.
சுதந்திரப் போராட்டத் தருணத்தில் கதருக்கும், கைத்தறிக்கும் ஆதரவு அதிகரித்ததால், நூற்பாலைகள் உற்பத்தி செய்யும் நூலுக்கு, கைத்தறி நெசவு கைகொடுத்தது. அப்போது புதிதாக தொடங்கப்பட்ட பைக்காரா நீர் மின் திட்டத்தில் கிடைத்த மின்சாரம், பஞ்சாலைத் தொழிலுக்கான உற்பத்தி செலவைக் குறைத்தது. மும்பை, அகமதாபாத் மில்களுக்குத் தேவைப்படும் நூல், கோவை நூற்பாலைகளிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது.
1930-க்குப் பிறகு மின்சாரம் மலிவாக கிடைக்க ஆரம்பித்ததால், பஞ்சாலைகள் வேகமாக வளரத் தொடங்கின. 1933-ல் ஆர்.கே.சண்முகம் செட்டியார் முயற்சியால் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. 1930-ல் பிரிட்டிஷ் அரசு, இந்திய இறக்குமதி ஜவுளி மீதான காப்பு வரியை உயர்த்தியது. 1931-ல் மகாத்மா காந்தியின் கதர், சுதேசிப் பிரசாரம், இறக்குமதி ஆடைகளுக்கு எதிரானதாகப் பயன்பட்டது. இந்த காலகட்டத்தில் பல பஞ்சாலைகள் உருவாகின.
1939-ல் இரண்டாம் உலகப்போரின்போது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், நூல், துணியின் தேவை அதிகரித்தது. இது கோவை பஞ்சாலைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பலமடைந்ததால், நூல் உற்பத்தியில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே பஞ்சாலைத் தொழில் ஏற்ற, இறக்கங்களுடன் இருந்தது. 1940-களில் தியாகி என்.ஜி.ராமசாமி தலைமையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.
ஆரம்பத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராகப் பணிபுரிந்த அவர், பின்னால் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான போராட்டங்களை நடத்தினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் ஈடுபட்ட அவர், சென்னை மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் பிரமுகர்களின் ஆலோசனையின்பேரில், கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம் உருவானது.
சுதந்திர இந்தியாவில் கலப்பு பொருளாதார யுக்தி கடை பிடிக்கப்பட்டதால், தனியார் துறைக்கென பல்வேறு தொழில்கள் ஒதுக்கப்பட்டன. எனினும், இந்திய அரசு கைத்தறிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. கைத்தறிக்குத் தகுதியான கவுண்ட் கொண்ட நூல் உற்பத்தியை அதிகரிக்க அரசு உத்தரவிட்டது. தொழிலாளர்களின் ஊதியம், பஞ்சு கிடைக்காதது, மின் பற்றாக்குறை காரணங்களால் நூற்பாலைகள் நலிவடையத் தொடங்கின.
இதையடுத்து, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆலைகளை, தேசிய பஞ்சாலைக் கழகம் எடுத்து, அவற்றை இயக்க வேண்டிய நிலை உருவானது. ஒரு கட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம், போனஸ் வழங்கப்பட்டது. பஞ்சாலைகளில் பணிபுரிவது மிகப் பெரிய கவுரவமாகக் கருதப்பட்டது.
ஆனால், 1990-க்குப் பின்னர் பஞ்சாலைகளின் நிலை தலைகீழாக மாறியது. கோவையில் நூற்றுக்கணக்கான பஞ்சாலைகள் மூடப்பட்டு, வி.ஆர்.எஸ். என்ற பெயரில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.
சுமங்கலி திட்டம்
இதற்கிடையில், சில பஞ்சாலை நிர்வாகங்களில் `சுமங்கலித் திட்டம்` என்ற பெயரில், பெண் தொழிலாளர்களுக்கு அதிக வேலை, குறைந்த கூலி என்ற முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது, கோவை மாவட்டத்தில் 560 பஞ்சாலைகளில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். குறிப்பாக, தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்.டி.சி) சார்பில் செயல்படும் ஆலைகளில் மட்டுமே நிரந்தப் பணியாளர்கள் உள்ளனர். பெரும்பாலான தனியார் ஆலைகளில் நிரந்தர பணியாளர்கள் கிடையாது. இதனால், குறைந்த கூலி வழங்கப்படுவது மட்டுமின்றி, சட்டப்படியான சலுகைகளும் எதுவுமில்லை.
பரிதாப நிலையில் வடமாநிலத் தொழிலாளர்கள்
இதுகுறித்து தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்க (ஐஎன்டியுசி) பொதுச் செயலர் கோவை செல்வன் `இந்து தமிழ்` செய்தியாளரிடம் கூறியதாவது:
பல தனியார் பஞ்சாலைகளில் தற்போது ரூ.250 முதல் ரூ.300 மட்டுமே தின சம்பளமாக வழங்குகிறார்கள். மேலும், வட மாநிலங்களைச் சேர்ந்த இளம் தொழிலாளர்களை குறைந்த கூலியில் அமர்த்தி, 12 மணி நேரம் வேலை வாங்குகின்றனர்.
பெரும்பாலான தொழிலாளர்களுக்கு பி.எஃப்., இ.எஸ்.ஐ. வசதிகள் செய்துதர வில்லை. பணியில் தவறு செய்தால், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்காமல், பணியிலிருந்து அனுப்பிவிடுவது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். மொழி பிரச்சினையால் வடமாநிலத் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தை அணுகவும் முடிவதில்லை. தொழிலாளர் நலத் துறையும் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.
அமல்படுத்தப்படாத சட்டங்கள்
கடந்த காலத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் நலன்கள் மற்றும் உரிமைக ளைத் தக்கவைக்க உருவாக்கப் பட்ட சட்டங்கள் எதையுமே முறையாக அமல் படுத்துவதில்லை. தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும், பஞ்சாலைத் தொழிலாளர் களின் பிரச்சினைகளுக்கு பெரிய கவனமும் கொடுப்பதில்லை.
கடந்த காலத்தில் பஞ்சாலைத் தொழில் மத்திய அரசின் முழு அங்கீகாரத்தையும் பெற்று, சம்பள கமிஷன் சிபாரிசு உள்ளிட்டவற்றால் சீரமைக்கப்பட்டிருந்தது. உலகத் தொழிலாளர் சம்மேளனத்தால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால், தற்போது இவை எதுவுமே நடைமுறையில் இல்லை. கிராமப் பகுதிகளில் புதிய ஆலைகள் தொடங்கப் பட்டு, உரிமையாளர்கள் இஷ்டத்துக்கு ஆலையை நடத்துகிறார்கள். கோவை தொழிலாளர்கள்தான் நாட்டிலேயே அதிக ஊதியம், போனஸ் பெற்றவர்கள் என்ற பெருமை பறிபோய்விட்டது.
எனவே, தமிழக அரசு தொழிலாளர் நலச் சட்டங்களையும், குறைந்தபட்ச கூலி சட்டத்தையும் கடுமையாக அமல்படுத்த வேண்டும். 8 மணி நேர வேலை என்பதை உறுதிசெய்ய வேண்டும். இதை அமல் படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
குறைந்தபட்ச சம்பளம் அமல்படுத்தப்படுமா?
கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலரும், மாவட்ட சிஐடியு தலைவருமான சி.பத்மநாபன் கூறியதாவது:
1990-ம் ஆண்டுக்கு முன்புவரை நூல் உற்பத்தியில் உரிம முறை கடைப் பிடிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உரிமம் வழங்கப்பட்டு, பஞ்சாலைகள் சிறப்பாக இயங்கின. 1990-ல் புதிய பொருளாதாரக் கொள்கையால் ஜவுளித் துறையின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
மிகச் சாதாரணமாக புதிய ஆலைகள் தொடங்கப்பட்டன. சிறு, சிறு நிறுவனங்கள் உருவாகி, இஷ்டத்துக்கு தொழிலை நடத்தின. அதற்கு முன் வரை தொழிலாளர்களுக்குக் கிடைத்து வந்த சம்பளம், போனஸ் மற்றும் இதர சலுகைகள், கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்பட்டன.
ஆலைகளை நவீனப்படுத்தாததாலும், பழைய தொழில் முறைகளாலும் பஞ்சாலைகள் நசியத் தொடங்கின. பெரு நிறுவனங் களுடன் போட்டிபோட முடியாமல் பல பஞ்சாலைகள் மூடப்பட்டன. பல பஞ்சாலைகளில் தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. தினச் சம்பளமாக ரூ.300-க்கு குறைவாகத்தான் கிடைக்கிறது.
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இதுவும் கிடைப்பதில்லை. தங்குமிடம், உணவு மட்டும் கொடுத்துவிட்டு, குறைந்த சம்பளத்தில், அதிக உழைப்பை உறிஞ்சிக்கொள்கின்றனர். மத்திய, மாநில அரசு களுக்கு பஞ்சாலைத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பாக எவ்விதக் கொள்கையும் இல்லாததால், இந்த தொழில் கடும் நெருக்கடிகளை சந்திக்கிறது.
கண்காணிக்குமா அரசு?
மாநில அரசு பஞ்சாலைத் தொழிலாளர்களுக்காக அறிவித்துள்ள குறைந்தபட்ச சம்பளம் அமலாக்கப்படுவதில்லை. அனைத்து பஞ்சாலைகளும் இந்த சம்பளத்தை அமல்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை. மேலும், பி.எஃப்., இஎஸ்ஐ உள்ளிட்ட சலுகைகளும் முறையாக கிடைக்கச் செய்ய வேண்டும். பரிதாபமான நிலையில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் களைய அரசு முன்வர வேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பு" என்றார்.
நாடு முழுவதும் சீரான சம்பளக் கொள்கை?
ஆலை உரிமையாளர்கள் தரப்பில் கேட்டபோது, "மொத்த நூல் உற்பத்தியில் 47சதவீதம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. பல மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. போதுமான சலுகைகள் இல்லாதது, மின் கட்டணம், சர்வதேச நாடுகளின் போட்டி, இறக்குமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல நெருக்கடிகளில்தான் பஞ்சாலைகள் இயங்குகின்றன.
ஏற்கெனவே, உலகமயமாக்கல், மிக அதிக சம்பளம், யூனியன் தொந்தரவு, நவீனமயமாக்க முடியாதது, தொழிற்சங்கங்களுக்கு இடையிலான போட்டி உள்ளிட்டவற்றால்தான், எண்ணற்ற ஆலைகள் மூடப்பட்டன. போட்டி நிறைந்த சந்தைச் சூழலில், வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆட்கள் பற்றாக்குறையால்தான், வட மாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிறோம். சில மாதங்கள் மட்டும் பணி செய்துவிட்டு, பின்னர் திடீரென வேலையை விட்டுச் சென்றுவிடுபவர்களை பணி நிரந்தரம் செய்வது எப்படி?
வெளிநாடுகளின் இறக்குமதிக்கு வரிச் சலுகைகள் கிடைக்கும் நேரத்தில், நமது ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழல்களைச் சமாளிக்க, பல நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்ததை (எஃப்.டி.ஏ) மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதுமான சீரான சம்பளக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். இந்தச் சூழலிலும், ஜவுளித் துறை வளர்ந்து வருகிறது. வர்த்தகம், லாபம் அதிகரிக்கும்போது, தொழிலாளர்களுக்கும் கூடுதல் சம்பளம், போனஸ், சலுகைகள் கிடைக்கும்" என்றனர்.
தேசிய பஞ்சாலைக் கழகம்
கோவையில் பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், ஸ்ரீரங்கவிலாஸ் மில்ஸ், கோவை முருகன் மில்ஸ் மற்றும் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காளீஸ்வரா மில்ஸ், ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடி பயனீர் ஸ்பின்னர்ஸ் என 7 மில்கள், தேசிய பஞ்சாலைக் கழகத்தின்கீழ் செயல்படுகின்றன. இவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT