Published : 03 Sep 2014 12:25 PM
Last Updated : 03 Sep 2014 12:25 PM

ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை முழுமையாக ரத்து செய்க: விஜயகாந்த்

வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தமிழக அரசோ இதை கண்டும், காணாமல் இருந்து கொண்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கும், தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாதது போலவும், அருகில் உள்ள மாநிலத்தில் இப்பிரச்சனை நடப்பதுபோலவும் தமிழகஅரசு நடந்து கொள்கிறது.

தற்போது போராட்டம் நடத்திவரும் அனைவருமே சுமார் 30-லிருந்து 40-வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். ஆனால் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும்.

எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்திவைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா முழுவதும் ஆசிரியர்களை போற்றும் விதமாக நாளை மறுதினம் (05.09.2014) ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே ஆசிரியர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x