Published : 01 Dec 2018 03:47 PM
Last Updated : 01 Dec 2018 03:47 PM

வாகன ஓட்டிகள் உயிரை வாங்கும் வடசென்னை சாலைகள்: ஒரே நாளில் மாணவன் உட்பட 3 பேர் பலி

ஆபத்து மிகுந்த போக்குவரத்து சாலையாக வடசென்னை மாறி வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக நேற்று ஒரு இளம்பெண், அவரது நண்பர், பள்ளி மாணவன் என மூன்றுபேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வடசென்னை சாலைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரை வாங்கும் சாலையாக மாறி வருகிறது. பகலில் லாரி போக்குவரத்தை அனுமதிப்பது, குறுகிய நெரிசலான சாலை, மெட்ரோ ரயில் பணி என சாலை ஆக்கிரமிப்பால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

திருவொற்றியூர் எண்ணூர் நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதும், உயிரிழப்பு நிகழ்வதும் வாடிக்கையாக உள்ளது. மறுபுறம் மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் குறுகலாகிவிட அதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சாலைகளில் உள்ள பள்ளங்களைப் பற்றி கவலைப்படாத மாநகராட்சியால் அதிகம் பாதிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகளே.

நேற்று மாலை சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அலி. இவரது மகள்  அமீர்நிஷா (18). இவரும் எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அன்பரசு (எ) அப்பாஸ் (20) என்பவரும் காதலித்து வந்தனர். நேற்று மாலை அன்பரசுடன் அவரது இருசக்கர வாகனத்தில் எண்ணூர் தாழாங்குப்பம் சென்ற அமீர்நிஷா மீண்டும் காலடிப்பேட்டை திரும்பியுள்ளார்.

இருசக்கர வாகனத்தை அன்பரசு ஓட்ட பின்னால் அமீர்நிஷா அமர்ந்து வந்துள்ளார். ஜாலியாகப் பேசி சிரித்தபடி வந்த அவர்கள் எண்ணூர் விரைவுச்சாலையைக் கடந்துள்ளனர். அப்ப்குதியில் சாலையில் தெருவிளக்கு எரியாத நிலையில் அவர்களுக்குப் பின்னால் திடீரென வேகமாக வந்த லாரி அன்பரசு ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.

இதில் இருவரும் தடுமாறி சாலையில் விழ, அமீர்நிஷாவின் தலையில் லாரியின் பின்சக்கரம் ஏறியது. அன்பரசுவின் வயிற்றின்மீதும் லாரி சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் விபத்து ஏற்பட்டதும் இறங்கி ஓடிவிட்டார். விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

லாரியை சிலர் தாக்கினர். உயிரிழந்த இருவர் உடலையும் எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல் உயர் அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் உடல்களை எடுக்க விடவில்லை. விபத்து நடந்த சாலையில் வேகமாக வரும் கனரக வாகனங்கள் காரணமாக வேகத்தடை அமைக்க நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மறுபுறம் விபத்து நடந்த சாலையில் தெருவிளக்குகள் சுத்தமாக எரிவதே இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்றும் சாலையில் தெருவிளக்கு இல்லாததே விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் வேகத்தடை அமைத்து, தெருவிளக்கைச் சீர்படுத்தி தருவதாக போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

விபத்து குறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இருவர் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதேபோன்று நேற்று மாலை பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் நெரிசல் காரணமாக தொங்கியபடி சென்ற 9-ம் வகுப்பு மாணவன் கீழே விழுந்ததில் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

திருவொற்றியூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கபிலன் (14). இவர் பள்ளி முடிந்து விச்சூர் செல்வதற்காக  அரசுப் பேருந்தில் பயணித்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கபிலன்  முதுகில் புத்தகப் பையை மாட்டியிருந்தார்.

மெட்ரோ பணியினால் சாலையில் பாதிப்பகுதி அடைக்கப்பட்டு, குண்டும் குழியுமான சாலையில் பேருந்து  ஓட்டுநர் குறுகலான சாலையில் பேருந்தை ஓட்ட சாலை ஓரமாக இருந்த மின்பெட்டியில் தொங்கியபடி வந்த கபிலனின் புத்தகப்பை சிக்கியது.

பேருந்தின் வேகத்தில் புத்தகப்பை சிக்கியதில் இழுத்து கீழே வீசப்பட்ட கபிலன் நொடிப்பொழுதில் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். இதில் அவர்மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அநியாயமாக ஒரு மாணவன்   உயிர் மின்பெட்டியில் சிக்கியதால் உயிரிழந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து திரண்டனர்.

மெட்ரோ பணிக்கு எதிராக அவர்கள் கண்டித்தனர். பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகன் உயிரிழந்த தகவல் கிடைத்து வந்த கபிலனின் தாயார் மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

மெட்ரோ பணிகள் முடிவடையும் வரை  வடசென்னை பகுதிகளிலும் சாலைகளையும் பராமரித்து விபத்தில்லா போக்குவரத்திற்கு போலீஸார் உதவி செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மேற்கண்ட இரு விபத்துகளிலும் மூன்று இளம் உயிர்கள் அநியாயமாகப் போனது. அதற்கு அவர்கள் காரணமல்ல. கவனக்குறைவாக உள்ள அதிகாரிகளே காரணம் என்பதே உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x