Published : 29 Dec 2018 08:26 AM
Last Updated : 29 Dec 2018 08:26 AM
2019, ஜனவரி 1-ம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கை பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என கடந்த ஜூன் 5-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
நீதிமன்றம் மறுப்பு
தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே ஒருபுறம் ஆதரவு இருந்தே வருகிறது. தடைக்கு எதிராக பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
அரசின் உத்தரவைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களின் முழுக் கவனமும், 'பாலித்தீன் பைகள் பயன்படுத்தாத மாவட்டம்' என்ற பெயரைப் பெறுவதிலேயே உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டங்களும் நடந்து வருகின்றன.
இன்னும் 6 நாட்களில் தடை அமலுக்கு வரவுள்ள நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளவர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் கூறியது:
ஞானசேகர், வடலூர் (பாலித்தீன் பொருள் வணிகர்): அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. பாலித்தீன் பைகளை சிறு வியாபாரிகள்தான் பெருமளவு பயன்படுத்துகின்றனர். முதலில் இங்கு மாற்றத்தையும், அதற்கான மாற்றுப் பொருளையும் அறிமுகப்படுத்திவிட்டு அமல்படுத்தி னால், அரசின் நோக்கம் நிறைவேறும்.
ராணி, இல்லத்தரசி, விழுப்புரம்: சில நேரங்களில் வீட்டிலிருந்து வரும்போது குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்து வருவதில்லை. அதனால் பை கொண்டு வருவதில்லை.
மக்கள் புரிந்துகொண்டால்...
ஆர்.பன்னீர்செல்வம், விருத்தாசலம் (பாலீத்தீன் விற்பனை முகவர்): சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு அரசு கொண்டு வந்துள்ள ஆணையை மதிக்கிறோம். மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாத பைகளுக்கு தடை விதிப்பதில் மாற்றுக் கருத்தில்லை. பொத்தாம் பொதுவாக அனைத்துக்கும் தடை என அதிகாரிகள் செயல்படுவது வருத்தத் துக்குரியது.
பாலித்தீன் பைகளுக்கு சரியான மாற்று என்ன என்பதை அறிவிக்காமலேயே தடையை அமல்படுத்துவது சரியானதல்ல. அரசு யோசிக்க வேண்டும்.
நல்ல பலனைத் தரும்
குளிர்பான பாட்டில்கள் போன்ற மலிவான எடை குறைந்த பாலி எத்திலின் டெரப்தலேட் வகை பிளாஸ்டிக் பொருட்கள், பிவிசி எனும் பாலிவினைல் குளோரைடினால் தயாரிக்கப்படும் குடிநீர் குழாய்கள், பாலி ஸ்டெரினால் என்ற வேதிப் பொருளால் தயாரிக்கப்படும் பிளேட், கரண்டி, காபி குவளைகள், கைப்பைகளும் தவிர்க்கப்படக் கூடிய பொருட்களே என்பதை மக்கள் புரிந்து கொண்டால் அரசின் தடை நல்ல பலனைத் தரும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT