Published : 31 Dec 2018 08:18 PM
Last Updated : 31 Dec 2018 08:18 PM
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தமிழகத்தில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனை அமல்படுத்த அரசுத் துறைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
உணவுப் பொட்டலங்கள் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மாற்றாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில் மற்றும் மரப்பொருட்கள், துணி, காகிதம், மற்றும் சணலால் தயாரிக்கப்பட்ட பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், மண் குவளைகள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, துணிப் பைகள், ஓலைப் பெட்டிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்றுப் பொருட்கள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.திருநெல்வேலி மாவட்ட வியாபாரிகளிடம் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி டவுனில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் பலகார வகைகளை ஓலைப் பெட்டிகளில் வைத்து பார்சல் செய்து கொடுக்கின்றனர். இதேபோல், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வாழை இலை, ஓலைப் பெட்டியில் இறைச்சி வகைகளை பார்சல் செய்து கொடுக்கின்றனர். பூக்கடைகளில் வாழை இலைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கி வைத்துள்ளனர். டீ, காபியை பார்சலில் வாங்குவோர் குறிப்பிட்ட தொகை முன்பணமாக செலுத்தி, பாத்திரத்தில் வாங்கிச் செல்லலாம் என்றும், பாத்திரத்தை திருப்பி ஒப்படைக்கும்போது முன்பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் டீக்கடைக்காரர் கூறினார். அல்வா கடைகளில் அலுமினியத்தாளை பயன்படுத்தி, அல்வாவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT