Published : 06 Dec 2018 10:31 AM
Last Updated : 06 Dec 2018 10:31 AM
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 4 இடங்களில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கப்படும் என நகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகராட்சியில் உள்ள வீடு, கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், காய்கறி சந்தைகளில் இருந்து நாள்தோறும் சுமார் 40 முதல் 50 டன் வரை குப்பைகள் துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப் படுகிறது. இதில், 22 வார்டுகளில் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களும், 11 வார்டுகளில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த துப்புரவாளர்களும சேகரிக்கின்றனர்.
அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் வெங்கடாபுரம் ஊராட்சி பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக குப்பைக் கிடங்கில் குப்பைகளை தரம் பிரித்து மறுசூழற்சி செய்யாத நிலையில், அங்கு மலை போல் குப்பைகள் குவிந்த கிடக்கின்றன.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த செங்குட்டுவன் கூறும்போது, ‘‘நகராட்சி குப்பைக் கிடங்கில் கடந்த 8 ஆண்டுகளாக சுமார் 10 லட்சம் டன் குப்பைகள் மறு சுழற்சி செய்யாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதற்காக கடந்த 2013-ம் ஆண்டு குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரம் சுமார் ரூ. 5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. ஆனால் இயந்திரம் இதுவரை செயல்படாமல் உள்ளது.
இங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருந்துவக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றுவதுடன், தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்து அகற்ற வேண்டும். இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் ரமேஷ் கூறும் போது, ‘‘மகாராஜகடை ரோட்டில் வெங்கடாபுரம் ஊராட்சியில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தின் அருகில் குப்பைகளை உரமாக மாற்ற புதியதாக ரூ. 4 கோடி மதிப்பில் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குப்பைகளை உரமாக்கும் பணி வரும் ஜனவரியில் துவங்க உள்ளதால், மலை போல் தேங்கி உள்ள குப்பைகளை பிரித்து உலர வைக்கும் பணிகள் ஜேசிபி இயந்திம் மூலம் நடைபெற்று வருகிறது.
மேலும் நகராட்சி குப்பைக் கிடங்கு, நேதாஜி சாலை மயானம், திருவண்ணாமலை சாலை மயானம் மற்றும் பெங்களூரு சாலையில் உள்ள பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் ஆகிய நான்கு இடங்களில் ரூ.2.28 கோடி மதிப்பில் குப்பைகளை உரங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பணிகளும் ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT