Published : 18 Dec 2018 03:43 PM
Last Updated : 18 Dec 2018 03:43 PM
புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் மீது அதிக அளவு புகார்கள் வந்ததால் தனியார் காரில் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புகைப்படம், வீடியோ எடுத்தார். ஆளுநர் கிரண்பேடி, உயர் அதிகாரிகளை அழைத்து பணி 'மோசம்' என்று எச்சரித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலை, அண்ணா சாலை உட்பட நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து போலீஸாரே பணியில் இருப்பதில்லை என்று மக்கள் அதிக அளவில் குற்றம் சாட்டி வருகின்றனர். சிக்னல்களில் போலீஸாரே இல்லாமல் தாறுமாறாக வாகனங்கள் செல்கின்றன என புகார்கள் அதிக அளவில் வந்ததால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனியார் காரில் சென்று போக்குவரத்து நிலையை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்து புகைப்படம், வீடியோ எடுத்தார்.
இதுதொடர்பாக கிரண்பேடி கூறியதாவது:
"புதுச்சேரியில் போக்குவரத்து மேலாண்மை தேவையாக உள்ளது. போக்குவரத்து சீரமைப்பில் போலீஸாரின் பங்கு குறைவாக உள்ளது. குறிப்பாக கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்நிலை அதிக அளவு உள்ளது. போக்குவரத்து போலீஸார் தங்கள் பணிகளைச் சரிவர செய்யவில்லை. போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை எவ்வாறு செய்வது என்றே தெரியாமல் உள்ளனர்.
போக்குவரத்து சிக்னல் அருகே நிற்காமல் சாலையோரம் நின்று பேசியபடி நிற்கின்றனர். போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் எங்கும் ஈடுபடவில்லை. பல போக்குவரத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீஸாரே காணவில்லை. அதேபோல் நகரப்பகுதியில் உயர் அதிகாரிகள் யாரும் ரோந்துப் பணியிலும் காணவே இல்லை.
உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சம்மன் அனுப்பினேன். அவர்கள் நேரில் வந்ததும் பணி மோசமாக உள்ளதை சுட்டிக்காட்டினேன். நான் தனியார் காரில் சென்று ஆய்வு செய்தேன். தொடர்ந்து இந்த ஆய்வு நடக்கும். பொதுமக்களும் போக்குவரத்து பிரச்சினை தொடர்பாக புகார்களை 1031, 100 எண்களில் பதிவு செய்யலாம். புகைப்படம், வீடியோ இருந்தால் நேரடியாக ராஜ்நிவாஸுக்கு திங்கள் முதல் புதன் வரை மாலை 5 மணிக்கு முன் அனுமதி பெறாமலேயே நேரடியாக சந்திக்கலாம்".
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT