Last Updated : 11 Dec, 2018 09:27 AM

 

Published : 11 Dec 2018 09:27 AM
Last Updated : 11 Dec 2018 09:27 AM

மதுரை சிறையில் கைதிகள் மரணம் அதிகரிப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல்

மதுரை மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளில் கைதிகளின் மரணம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் 135-க்கும் மேற்பட்ட சிறைகள் உள்ளன. இதில் மிக பழமையான மதுரை மத்திய சிறை கடந்த 1885-ல் கட்டப்பட்டது. இந்த சிறை சுமார் 35 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள், காவலர்கள் என 80 பேர் பணிபுரிகின்றனர். நவம்பர் 8-ம் தேதி நிலவரப்படி ஆயுள் தண்டனை, நீண்ட நாள், குறுகிய கால தண்டனை, விசாரணைக் கைதிகள் என 1168 பேர் இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை சிறையில் உள்ள கைதிகளுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க சிறை வளாகத்தினுள் மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை போன்ற வசதிகள் இருந்தும் உடல்நிலைப் பாதிப்பு, நோய் தொற்று உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளில் கைதிகளின் இறப்பு இரு மடங்கு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறை வளாகத்தில் நிலவும் சுகாதாரக் கேடும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘இந்தியன் குரல்’ என்ற அமைப்பைச் சேர்ந்த எம்ஜி. மோகன் மதுரை மத்திய சிறை குறித்து 11-க்கும் மேற்பட்ட தகவல்களை கேட்டிருந்தார். இதற்கு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இதில் 2015-2016-ம் ஆண்டுக்கு ரூ. 39.07 லட்சம், 2017-2018ம் ஆண்டுக்கு ரூ.39.88 லட்சம் சிறை பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 முதல் 2016 நவம்பர் வரை மரணம் அடைந்தவர்கள் பற்றிய கேள்விக்கு, 2015-ல் தண்டனை கைதிகள்- 3, விசாரணைக் கைதிகள்-5, 2016-ம் ஆண்டில் தண்டனைக் கைதிகள் - 5, விசாரணைக் கைதி - 5, 2017-ல் தண்டனைக் கைதி - 5, விசாரணைக் கைதி - 10, தடுப்புக் காவல் கைதி-1 மற்றும் 2018-ல் தண்டனை கைதி- 10, விசாரணைக் கைதி-6, தடுப்புக் காவல் கைதி-1 எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம் 2017, 2018-ல் கைதிகளின் மரணம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. பெரும் பாலானோர் உடல்நலம் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யாரும் இறக்கவில்லை என, பொது தகவல் அளிக்கும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்ஜி. மோகன் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 35 ஏக்கர் பரப்பளவுள்ள சிறை வளாகத்தை சுத்தம் செய்ய 2 துப்புரவு ஊழியர்களும், 1,168 கைதிகளுக்கு 2 சமையலரும் மட்டுமே உள்ளனர். சிறைத்துறை மருத்துவமனையில் 2 மருத்துவரில் ஒருவர் மட்டுமே பணியில் இருப்பது தெரிகிறது. பாதிக்கப்பட்ட கைதிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகக் கூறுகின்றனர். சுகாதாரக் கேடால் நோய்த் தொற்று ஏற்பட்டு கைதிகள் இறப்பது வேதனை அளிக்கிறது.

சிறைக் காவலர்களால் தாக்கப்படும்போது ஏற்படும் காயங்களுக்கும், அனைத்து உடல்நிலை பாதிப்புகளுக்கும் கைதிகளுக்கு ஒரே மாத்திரை, மருந்தை தருவதாக தெரிய வந்துள்ளது.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பற்றி விவரம் கேட்டபோது, எந்த தகவலும் தரவில்லை. மதுரை மத்திய சிறையில் கைதிகளின் மர ணத்தைத் தடுக்க சிறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும். சிறை மருத்துவமனையையும் மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x