Published : 07 Dec 2018 10:25 AM
Last Updated : 07 Dec 2018 10:25 AM
வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களில் நம்பர் பிளேட்டுகளை போக்குவரத்துத் துறை வழங்குகிறது. சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு வெள்ளை நிறமும், வர்த்தகhd பயன்பாட்டுக்காக மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வர்த்தகப் பயன்பாடு எனில், அதற்கேற்ப வரி மாறுபடுகிறது. சொந்த பயன்பாட்டுக்கு சில வரிகள் விதிக்கப்படுவதில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி பலர் சொந்த பயன்பாட்டுக்கான கார்களை வர்த்தக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பல்வேறு வரிகளைச் செலுத்தி வாகனங்களை இயக்கி வரும் வாடகை வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு இயக்கியதாக 5 வாகனங்களை பிடித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், மொத்தம் ரூ.15,600-ஐ அபராதமாக விதித்தனர். இதேபோல, கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 10 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை மட்டும் மொத்தம் 120 வாகனங்களுக்கு ரூ.5,36,350 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கெளரவப் பிரச்சினை?
இதுதொடர்பாக போக்குவரத்துதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது வாடகை வாகனமாக இருந்தால் தற்காலிக அனுமதி (டிபி) வாங்கிச் செல்ல வேண்டும். ஆனால், சொந்த வாகனமாக இருந்தால் அனுமதி வாங்காமல் செல்லலாம். சில வாடிக்கையாளர்கள் வாடகை வாகனத்தில் செல்வதைவிட, வெள்ளை நம்பர் பிளேட் உள்ள சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தில் சென்று இறங்கினால்தான் கௌரவமாக இருக்கும் என்று கருதுகின்றனர். அதற்காகவே இதுபோன்ற வாகனங்களை வாடகைக்கு எடுக்கின்றனர்.
அபராதம் எவ்வளவு?
சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்காக இயக்கினால் குறைந்தபட்சம் ரூ.2,500-ம், அதிகபட்சம் ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுகிறது. வாடகைக்காக வாகனத்தை இயக்கினால் எந்தெந்த வரிகளை செலுத்த வேண்டுமோ அந்த வரிக்கான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மேலும், வாகன தகுதிச் சான்று (எஃப்சி), மாசு கட்டுபாட்டு சான்று (பியுசி) ஆகியவை இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்கிறோம். இதில், எஃப்சி இல்லையெனில் ரூ.500, பியுசி இல்லையெனில் ரூ.1,000, வாகனக் காப்பீடு இல்லையெனில் ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது.
சில சுற்றுலா டாக்ஸி ஓட்டுநர்கள் இரண்டு வகையான கார்களையும் வைத்திருக்கின்றனர். அவர்கள் பயணிகளை வர்த்தகப் பயன்பாட்டுக்கான வாகனத்தில் அழைத்துச் செல்வதாக முன்பதிவு செய்துவிட்டு, சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். ஆனால், வர்த்தகப் பயன்பாட்டுக்கான வாகன வாடகையை வசூலித்துவிடுகின்றனர். இதனால், அவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.
ஒத்துழைப்பு அவசியம்
பயணிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடுகளை எங்களால் தடுக்க முடியாது. எனவே, சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்காக இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏதேனும் புகார் இருப்பின் jtccbe@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்வாதாரம் பாதிப்பு
அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நல சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் சி.பி.பாலாஜி கூறும்போது, “நாங்கள் ஆண்டுதோறும் வாகன தகுதிச் சான்றுக்காக கட்டணம் செலுத்துகிறோம்.
அதோடு, காப்பீட்டுத் தொகையும் அதிகமாக செலுத்துகிறோம். இதுபோக, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுநர் உரிமத்தையும் புதுப்பிக்கிறோம், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும்போது அனுமதிக் கட்டணத்தை செலுத்துகிறோம். ஆனால், இவை ஏதும் இல்லாமல் சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்கு விடும்போது எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, தனிப்படைகளை அமைத்து அரசுக்கு வரி வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அதோடு, வாகனத்துக்கு ஏற்ப வரி ஏய்ப்புத்தொகையை செலுத்தினால் மட்டுமே வாகனம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். அப்போதுதான் முறைகேடுகள் குறையும்” என்றார்.
விபத்து இழப்பீடு கிடைக்காது
சொந்த பயன்பாட்டுக்கான கார், வாடகைக்காக பயன்படுத்தப்படும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கான இழப்பீடு கிடைக்காது. ஆனால், வர்த்தகப் பயன்பாட்டுக்கான வாடகை காரில் பயணிக்கும் பயணிகள் விபத்தில் சிக்கினால், பயணிகளுக்கு முழு இழப்பீடு கிடைக்கும் என பொதுத் துறை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT