Last Updated : 30 Dec, 2018 05:45 PM

 

Published : 30 Dec 2018 05:45 PM
Last Updated : 30 Dec 2018 05:45 PM

சிலப்பதிகார எழுத்துப் பணியைச் செய்வதே பிரபஞ்சனுக்கு செலுத்தும் அஞ்சலி: எஸ்.ராமகிருஷ்ணன்

சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட எழுத்துப் பணியைக் கையில் மீண்டும் நான் எடுப்பதே பிரபஞ்சனுக்கு செலுத்தும் அஞ்சலி என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் இராதே அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்வில்  பங்கேற்று எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் பேசியதாவது:

''தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு நியாயமான வாழ்க்கை கிடைக்கவில்லை. துயர வாழ்க்கையே பொதுவிதியாக தமிழ் எழுத்தாளர்களுக்குள்ளது. நான் உட்பட பலருக்கும் துயரப் பாதையில் மோதிதான் செல்லும் சூழல் உள்ளது. இருந்தாலும் அதில் எப்புகாரும் இல்லாமல் வாழ்ந்தார் பிரபஞ்சன். 40 ஆண்டு கால சென்னையில் அவர் வாழஜ் காரணம், எழுத்தாளராக ஒரு இடம் பிடிக்கத்தான்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக விரும்பியே வந்தார். ஆனால் திரைத்துறை அவரை அவமதித்து துரத்தியது. அதையடுத்து எழுத்தாளரானார். இலக்கியத்தில் அவர் கதாநாயகரானார். எழுத்து வழியாக அவர் எப்போதும் வாழ்வார் என்ற போதிலும், அவர் பட்ட அவமானம் அதிகம்.

குடும்பத்துடன் வாழும் வாழ்வும், அவர் பசிக்கு உரிய உணவும் கிடைத்திருந்தால் இன்னும் நல்ல இலக்கியத்தை படைத்திருப்பார்.

பூம்புகாரிலிருந்து புறப்பட்டு கொடுங்களூர் வரை சிலப்பதிகாரம் எழுதப்பட்ட பகுதியில் பயணம் மேற்கொண்டேன். சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத  வாய்ப்பு ஏற்படவில்லை. ஏதோ ஒன்று எழுதவிடவில்லை. அப்பணியை பிரபஞ்சன் கையில் எடுத்தார். இதேபோல் பயணம் செல்ல முடிவு எடுத்தோம். ஆனால் வாய்க்கவில்லை. அப்பணியை கையில் மீண்டும் நான் எடுப்பதே பிரபஞ்சனுக்கு செலுத்தும் அஞ்சலி''.

இவ்வாறு எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

முன்னதாக, பிரபஞ்சன் படத்தை திறந்து வைத்து சி. மகேந்திரன் பேசுகையில், "அரசியல் பண்பாடு மக்களுக்கானவையாக மாற்றப்பட வேண்டும். அதற்கான முன்னணியில் எழுத்தாளர்கள் இருப்பது அவசியம். இலக்கிய மேடையில் இலக்கியவாதிகளுக்கே முக்கியத்துவம் தரப்படவேண்டும் " என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக்கு பொறியாளர் இரா. தேவராசு தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் பா. செயபிரகாசம், பிஎன்எஸ் பாண்டியன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், சீனு தமிழ்மணி, இளங்கோ, ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x