Published : 06 Dec 2018 10:42 AM
Last Updated : 06 Dec 2018 10:42 AM
உலக மண் தினத்தை முன்னிட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமான விதைப் பந்துகளை உருவாக்கி, அதை வைகை ஆறு, வண்டியூர் கண்மாய் போன்ற நீர்நிலைகளில் எறிந்து நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய மரங்களின் விதைகளை தூவி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை வைகை ஆற்றின் இரு கரைகளும் காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டதால், ஏராளமான மரங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன. அதனால், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாரம்பரிய மரங்களை நட்டு பராமரித்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், பொதுப்பணித் துறையினர் வைகை ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி வளர்ந்த மரக்கன்றுகளையும் அப்புறப்படுத்தினர்.
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக மதுரையில் அனைத்து காலங்களிலும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில் அழிந்துபோன பாரம்பரிய மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், உலக மண் தின விழாவை முன்னிட்டு ஏராளமான விதைப் பந்துகளை தயாரித்து அவற்றை வைகை ஆறு, வண்டியூர் கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் எறிந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரியின் பசுமை சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் மாணவர்கள் நேற்று முன்தினமே களிமண்ணை தயார் செய்து, அதில் வேப்ப மரம், புளிய மரம், அரச மரம், புங்க மர விதை போன்ற பாரம்பரிய விதைகளை போட்டு விதைப்பந்து தயார் செய்தனர்.
இதுகுறித்து மாணவர் சந்தோஷ் கூறியதாவது: விதைப்பந்து என்பது மண், சாணம், நாட்டு விதை ஆகிய 3-ம் சேர்ந்த கலவை.
நாட்டு மரங்களின் விதைகளை களிமண்ணில் பரப்பி, விதைப் பந்துகளை தயார் செய்தோம். உலக மண் தினத்தில் மண் அரிப்பு, மண்ணைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிற அதே நேரத்தில், மண்ணில் விதைகளை பொதிந்து அவற்றை நீர்நிலைகளில் எறியும்போது விதை துளிர்விட்டு பெரும் விருட்சமாக வளரும் என்ற விழிப்புணர்வையும் பொது மக்களுக்கு ஏற்படுத்தினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT