Published : 09 Dec 2018 10:05 AM
Last Updated : 09 Dec 2018 10:05 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியேற்றும் பல்வேறு குடிசைத் தொழில்களில் தோசைப்புளி தயாரிப்பு முக்கியமானது. புளியம்பழத்தை உடைத்து விதை நீக்கி அச்சில் இட்டு வட்ட வடிவத்தில் விற்பனைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுவது தோசைப்புளி என்று அழைக்கப்படுகிறது.
தென் இந்திய மக்களின் சமையல் கலாச்சாரத்தில் குழம்புக்கு சுவை கூட்டும் உணவுப் பொருட்களில் புளி முக்கிய இடம் வகிக்கிறது. சுவை மட்டுமின்றி மருத்துவ குணம் மிகுந்த புளியம் பழத்தை ஆதிகாலம் முதல் இன்று வரை சமையலில் பயன்படுத்தி வருவது தொடர்வதால் புளியின் தேவையும் அதிகரித்து வருகிறது.
ஆரம்ப கால கட்டத்தில் பனை ஓலையில் சுற்றப்பட்டு விற்பனைக்கு வந்த கொட்டைப்புளி கால மற்றத்தில் நவீனப்படுத்தப்பட்டு கொட்டை எடுக்கப்பட்ட தோசைப்புளியாக மாற்றமடைந்துள்ளது. இந்த தொழில் அன்றாட வருமானத்துக்கு வழி வகுப்பதால், வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களிடையே இன்று வரை இந்த குடிசை தொழில் அழியாமல் உள்ளது.
தமிழகம் முழுவதற்கும் தேவையான தோசைப்புளியை கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களே வழங்குகின்றன. கிருஷ்ணகிரியில் ஓசூர் அடுத்துள்ள ராயக்கோட்டை தோசைப்புளி தயாரிப்பு குடிசைத் தொழிலின் மையமாக திகழ்கிறது. ராயக்கோட்டையை சுற்றியுள்ள பழையூர், உடையாண்டப்பள்ளி, குட்டூர், குருப்பட்டி, போடம்பட்டி, எச்சம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் குடிசைத் தொழிலாக தோசைப்புளி செய்வது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ராயக்கோட்டையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட புளி மண்டிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் தோசைப்புளி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல இங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் தோசைப்புளி செய்வதில் ஈடுபட்டுள்ள பெண்கள், தங்களுக்கு தேவையான பதப்படுத்தாத புளி மற்றும் தோசை புளி செய்வதற்கான வளையம் உள்ளிட்ட மூலப்பொருட்களை புளி மண்டியில் இருந்து பெற்று தோசைப்புளி தயாரித்து கொடுக்கின்றனர்.
தோசைப்புளி தயாரிப்பில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள அங்காளம்மா கூறுகையில், ‘‘ஒரு கூடை (16 கிலோ) புளியைப் பெற்று அதில் இருந்து ஓடு, நார் மற்றும் கொட்டைகளை அகற்றி சுத்தப்படுத்தி தோசைப்புளி தயாரித்தால் ரூ.150 கூலி கிடைக்கிறது. வீட்டு வேலை செய்து கொண்டே ஓய்வு நேரங்களில் தோசைப்புளி தயாரிப்பில் ஈடுபட்டு சிறிய அளவில் ஊதியம் பெற்றாலும், அது குடும்பத்தின் வறுமை நிலையை சமாளிக்க உதவியாக உள்ளது,’’ என்றார்.
இதுகுறித்து ராயக்கோட்டை புளி மண்டி உரிமையாளர் ஜெகதீசன் கூறியதாவது: ராயக்கோட்டையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தோசைப்புளி உற்பத்தி குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. ராயக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மைசூரு, கோலார், மகாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புளியம்பழத்தை வாங்கி வந்து, இங்கு தோசைப்புளி உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் ஒரு வாரத்தில் 50 முதல் 60 டன் என ஒரு மாதத்துக்கு 240 டன் வரை தோசைப்புளி உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதற்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.
ராயக்கோட்டையில் உள்ள தனியார் குளிர் சாதனக் கிடங்கில் தோசைப்புளியை வைத்து பதப்படுத்த 2 மடங்கு கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டி உள்ளது. ஆகவே இங்கு உற்பத்தியாகும் தோசைப்புளியை பதப்படுத்தி பாதுகாப்புடன் சேகரித்து வைக்க புளிக்காக தனியாக அரசு குளிர்சாதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பது எங்களுடைய நீண்டநாள் கோரிக்கை. இதனால் தோசைப்புளி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் பயனடைவர். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். ஆகவே தோசைப்புளி தொழிலை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் குளிர் சாதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கண்ணன் கூறியதாவது: புளியமரம் வெப்பமண்டல பயிராகும். இந்த மரம் மற்ற மரத்தை போல இல்லாமல் நிழல் தருவதுடன் குறைந்த செலவில் அதிக பலனையும் தருகிறது. தோட்டக்கலைத் துறை மூலமாக புளிய மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு புளி ஒட்டுச்செடிகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் ரூ.15 விலை உள்ள ஒரு புளி ஒட்டுச்செடி, ரூ.7.50-க்கு மானிய விலையில் கிடைக்கிறது. இந்த செடிகளை மாவட்டத்தில் திம்மாபுரம், ஜீனூர் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் பெற்று விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் வணிகம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண் துணை இயக்குநர் ராமமூர்த்தி கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை, தளி, கிருஷ்ணகிரி உட்பட 10 இடங்களில் குளிர் சாதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கிருஷ்ணகிரி குளிர்சாதனக் கிடங்கு புளி பதப்படுத்தவும், போச்சம்பள்ளி குளிர்சாதனக் கிடங்கு மாங்காய் பதப்படுத்தவும் மற்ற 8 இடங்களில் காய்கறிகள் பதப்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ராயக்கோட்டையில் தோசைப்புளி பதப்படுத்த தனியாக குளிர்சாதனக் கிடங்கு அமைக்க மனு அளிக்கப்பட்டால் குளிர்சாதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT