Published : 29 Apr 2014 09:59 AM
Last Updated : 29 Apr 2014 09:59 AM

சிறுசிறு குடும்பப் பிரச்சினைகளாலும் அதிகரித்து வரும் தீக்குளிப்பு சம்பவங்கள்: சிகிச்சைக்குப் பிறகும் தொடரும் வேதனை

குடும்பப் பிரச்சினையால் 60 சதவீத பெண்களும், 40 சதவீத ஆண்களும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயல்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு தீக்குளிக்க முயல்பவர்கள் உயிர் பிழைத்தாலும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

குடும்ப பிரச்சினை, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி மற்றும் வேலையின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காக பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இதில் பெரும்பாலானவர் கள் தீக்குளிக்கும் முயற்சியி லேயே ஈடுபடுகின்றனர். தீக் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக செயல்படும் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 2,100 பேர் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். இவர்களில் சுமார் 1,000 பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தவர்களாக இருக்கின்றனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.

தீக்காயத்திற்கு சிகிச்சை:

இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறை தலைமை மருத்துவர் ஜெ.ஜெகன்மோகன் கூறியதாவது:

வாழ்க்கை என்றால் பிரச் சினை இருக்கத்தான் செய்யும். பிரச்சினைகளை எதிர்த்து போராடுவது தான் வாழ்க்கை. அதை விடுத்து பிரச்சினைகளுக் காக மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்வது சரியான முடிவல்ல.

நம் நாட்டில் பெரும்பாலானவர் களின் தற்கொலை முயற்சிக்கு குடும்ப பிரச்சினையே முக்கிய காரணமாக உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக பெண் களில் 60 சதவீதம் பேரும், ஆண்களில் 40 சதவீதம் பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

அதோடு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு முடிவு வெளிவந்த பிறகு, தேர்வில் தோல்வி அடையும் ஒரு சில மாணவ, மாணவிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ளும் தற்கொலை முயற்சிகளை எடுக்கின்றனர். இதனை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

தொடரும் வேதனைகள்

இந்த மருத்துவமனையில் தீக் காயம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி துறைகள் இணைந்து தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கின்றன. தீக்காயத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்பு, தீக்காயங்கள் குணமாகிவிடும். ஆனால் அதனால் ஏற்பட்ட தழும்புகளுடன், அவர்கள் படும் கஷ்டங்கள் சொல்லித்தீராது. இதனால் அவர் கள் குடும்பத்தில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் ஒதுக்கப் படுகிறார்கள்.

தங்கள் முகத்தை தாங்களே கண்ணாடியில் பார்க்கக்கூட பலர் தயங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மனத ளவில் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.

சிகிச்சைக்கு பிறகு தொடர் சிகிச்சையை எடுக்காததால், தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் தோல்கள் சுருங்கிவிடும். இதனை சரிசெய்ய மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது.

புதிய கட்டிடம்:

இந்த மருத்துவமனையில் தீக் காயத்திற்கு சிகிச்சை அளிப் பதற்காக, புதிதாக 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அவர்களின் வேதனையை போக்கவும், மன தைரியத்தை கொடுக்கவும் மற்றும் அவர்களின் பிரச்சினை களை தீர்க்க ஆலோசனை களை வழங்கவும் மருத்துவ மனையிலேயே சம்பந்தப்பட்ட அலுவலர்களை அரசே நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

60 சதவீதத்தை தாண்டினால் கஷ்டம்

தீக்காயம் ஏற்பட்டால் முதலில் தோல்தான் சேதமடைகிறது. இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. கிருமிகள் எளிதாக உடலுக்குள் சென்றுவிடும்.

உடலில் தீக்காயம் 60 சதவீதத்தை தாண்டிவிட்டால், அவர்களை பிழைக்க வைப்பது கடினம். அதற்குள் இருந்தால், தீவிர சிகிச்சை அளிக்கலாம். இளைஞர்களாக இருந்தால், தீக்காயங்கள் விரைவாக குணமடைந்துவிடும். அதுவே முதியவர்களாக இருந்தால் குணமாக காலதாமதமாகும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்க் ஊற்றக்கூடாது

யாராவது ஒருவரின் உடலில் தீ பற்றி எரிவதை பார்க்க நேர்ந்தால், உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்ற வேண்டும். மண்ணையோ அல்லது வேறு எதையோ போடக்கூடாது. குறிப் பாக தீக்காயம் பட்ட இடத்தில் இங்க் ஊற்றக்கூடாது. இங்கு ஊற்றுவதால் தீக்காயம் எந்த அளவிற்கு உள்ளே சென்றுள்ளது என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x