Published : 05 Dec 2018 10:04 AM
Last Updated : 05 Dec 2018 10:04 AM
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த பள்ளப்பட்டியில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடப்பதாக ஊடகங்களில் பலமுறை செய்திகள் வெளியாகின. ஆனாலும், அம்மையநாயக்கனூர் போலீஸார் மெத்தனமாக இருந்ததால் விற்பனை தொடர்ந்து நடந்துவந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு பள்ளப்பட்டி சிலுக்குவார்பட்டியில் உள்ள கோழிக்கடை ஒன்றில் ஜெயச்சந்திரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றுள்ளார். அதை பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாய்ராம், முருகன், தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 பேர் வாங்கிக் குடித்துள்ளனர்.
குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு கடும் வயிற்றுவலியால் அலறித் துடித்துள்ளனர். இதைப் பார்த்ததும் ஜெயச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வயிற்றுவலியால் துடித்த 4 பேரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாய்ராம், முருகன் இருவரும் உயிரிழந்தனர்.
மற்ற இருவரும் அங்கேயே மயங்கிக் கிடந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் யாரும் அவர்களுக்கு உதவ ஆளில்லாமல் போனது. பொழுது நன்றாக விடிந்த பின் அவ்வழியாக வந்த பொதுமக்கள் 4 பேரும் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாடிப்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 4 பேரில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தங்கபாண்டியன் உயிரிழந்தார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த சாய்ராம் மற்றும் முருகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்தது திண்டுக்கல் பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடிப்பட்டி அரசு மருத்துவமனை திண்டுக்கல் நிலக்கோட்டை அதிகாலை 4 மணி அளவில் 4 பேர் கள்ளச்சாராயம் குடித்ததில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தை அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவான ஜெயச்சந்திரனை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கெனவே கள்ளச்சாராயம் விற்றதாக வழக்கு உள்ளது. சம்பவ இடத்தில் நிலக்கோட்டை டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். திண்டுக்கல் எஸ்பி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். கள்ளச்சாராயம் விற்பனையைத் தடுக்காத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT