Published : 21 Dec 2018 11:18 AM
Last Updated : 21 Dec 2018 11:18 AM
நடிகர் ரஜினி நடித்த 2.0 சினிமாவில் மொபைல்போன் கதிர்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நிலையில், சென்னையில் சிட்டுக்குருவிகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆய்வு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. இந்தியத் திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகிய இப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை கதை கருவாக கொண்ட திரைப்படம்.
மொபைல்போன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதால் அதை எதிர்த்து போராடுகிறார் பக்ஷிராஜன் (அக்ஷய் குமார்). பறவைகளை அழிக்கும் மனிதர்களை அழிக்க அவர் முயலவதை விளக்கும் விதமாக இந்த படம் அமைந்து இருந்தது. இதில் பக்ஷிராஜனின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்தநிலையில் செல்போன் கோபுரங்கள் மற்றும் மொபைல்போன்களால் சென்னையில் சிட்டுக்குருவி இனம் அழிந்து விட்டதா? என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக சமீபத்தில் கணக்கெடுப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
மெட்ராஸ் நேட்சுரலிஸ்ட் சொசைட்டி என்ற அமைப்பு சென்னையில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறித்து 4 மாதங்களாக கணக்கெடுப்பு நடத்தியது. இவர்களின் பதிவில் சுமார் 101 சிட்டுக்குருவிகள் இருப்பது பதிவாகியுள்ளது.
இவற்றில் 78 சிட்டுக்குருவிகள் கூடுகள் இல்லாமலும், 23 சிட்டுக்குருவிகள் கூடுகளுடனும் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை வெட்டுவாங்கேணி, நீலாங்கரை, சாஸ்திரிநகர், இந்திரா நகர், அடையாளர், போரூர் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் கவுரவச் செயலாளர் விஜயகுமார் கூறுகையில் ‘‘2012-ம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த சிட்டுக்குருவிகள் இருப்பது பெரிய அளவில் பதிவாகாமல் இருந்தது. பொதுவாகவே சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்தே வருகிறது. எனினும் நாங்கள் செய்த ஆய்வில் புதிய பகுதிகளில் இந்த சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன. குறிப்பாக பறக்கும் ரயில் என அறியப்படும் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களின் உள்பகுதியில் இந்த சிட்டுக்குருவிகளை காண முடிகிறது.
சிந்தாதிரிபேட்டை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், தரமணி, வேளச்சேரி ரயில் நிலையங்களின் உள்பகுதிகளில் சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன. இந்த ரயில்நிலைய கட்டடங்கள் உயரமாகவும், தனித்தும், அமைதியான பகுதியாகவும் இருப்பதால் இங்கு சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன. வீடுகளில் சிட்டுக்குருவிகள் தென்பட்டால் எங்களை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டோம். அதன் அடிப்படையில் பலர் எங்களுக்கு தெரிவித்தனர். இந்த சிட்டுக்குருவிகளை பாதுகாக்க பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் முன் வருகின்றனர்’’ என தெரிவித்தார்.
இதுபற்றிய விவரங்களை www.blackbuck.org என்ற இணையதளத்தில் இந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT