Published : 17 Dec 2018 10:34 AM
Last Updated : 17 Dec 2018 10:34 AM
சென்னையில் நேற்று குளிர்ந்த காற்று வீசி, வெப்பநிலை மிகவும் குறைந்தநிலையில், இதற்கான காரணத்தை தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கியுள்ளார். ‘பெய்ட்டி’ புயலின் போக்கு குறித்தும் விவரித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டது. குளிர்ந்த தரைக்காற்றும் வீசியது. மெரினா கடற்கரையில் நேற்று பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.
நேற்று வட தமிழக கடலோரப் பகுதிகள் அனைத்திலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழுந்து ஆர்ப்பரித்தன. இதனால் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மீனவ குடியிருப்புகள் வரை கடல் அலைகள் தொட்டுச் சென்றன.
படகுகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சுமார் 50 அடி தூரத்தில் உள்ள மணல் மேட்டுப் பகுதிகள் வரை அலைகள் வந்தன. திடீரென வெப்பநிலை மாறியது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது:
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‘பெய்ட்டி’ புயல் இன்று அதிகாலை 5:00 மணி நிலவரப்படி ஆந்திர மாநிலம் நர்சாபூருக்கு 200 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது, பீமாவரம், காக்கிநாடாவையொட்டி சென்று செயலிழக்கும். இது குளிர் புயலாகவே இருந்து வருகிறது.
இந்த புயல் இமயமலையின் குளிர் அலையை உறிஞ்சி சேர்த்ததால் புயல் மழை தரும் புயலாக அல்லாமல், குளிர் புயலாக மாறி விட்டது. வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி தீபத் வரையிலான குளிர்ந்த காற்றை இந்த புயல் தொடர்ந்து உறிஞ்சுவதால் குளிர் அலையுடன் கூடிய புயலாகவே நீடித்து வருகிறது.
அடர்ந்த மேகங்கள் இருந்தபோதிலும் அவற்றை மழையாக பொழியவிடாமல் இந்த குளிர்ந்த காற்று தடுத்து விட்டது. ‘பெய்ட்டி’ புயல் நேற்று சென்னையை ஒட்டிச் சென்றது. அப்போதும் கூட குளிர்ந்த காற்றை ஈர்த்த சென்றதால் புயலால் பெரிய மழை பெய்யவில்லை. மாறாக தூறல் மழை மட்டுமே இருந்தது.
குளிர்ந்த காற்று மட்டும் தொடர்ந்து வீசியது. இதனால் சென்னையின் வெப்பநிலை ஊட்டிபோல மாறியது. இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி சென்னையில் 20 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு வெப்பநிலை இருந்துள்ளது.. இது ஏறக்குறைய ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலை. காலை 6:30 மணியளவில் 22 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு வெப்பநிலை இருந்துள்ளது
இதேநிலை தான் ஆந்திராவில் தற்போது பரவியுள்ள பெய்ட்டி புயலால் நிலவுகிறது. மசூலிபட்டினம், ஏனாம் போன்ற நகரங்களில் கூட காலை நேர வெப்பநிலை 18 டிகிரி என்ற அளவில் உள்ளது. தொடர்ந்து குளிர்ந்த காற்று மட்டுமே வீசுகிறது. பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
இந்த ‘பெய்ட்டி’ புயல் இன்று பிற்பகல் ஆந்திர கடலோரப் பகுதியையொட்டி வரும் இருப்பினும் கரையை கடக்க வாய்ப்பில்லை. வலுவிழந்து மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து பின்னர் மிகவும் வலுவிழந்து மியான்மருக்கு செல்லவே அதிகம் வாய்ப்புள்ளது.
புயல் கரையை கடப்பதால் ஆந்திராவில் நர்சபூர், பீமாவரம், காக்கிநாடா பகுதியில், மக்கள் வெளியேற்றப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இந்த புயலால் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பில்லை. அதுபோலவே சேதத்தை ஏற்படுத்தும் காற்றும் இருக்காது. அதற்கு பதிலாக குளிர்ந்த காற்று மட்டுமே இருக்கும். எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT