Published : 25 Sep 2014 01:22 PM
Last Updated : 25 Sep 2014 01:22 PM

3 மாதமாகியும் ஒரு தகவலும் இல்லை: ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் நிலை என்ன?

ஆப்கானிஸ்தானில் தமிழக பாதிரியார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும், இதுவரை அவரை மீட்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாதிரியாரை பற்றிய ஒரு தகவலும் கிடைக்காமல், அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

இலங்கைத் தமிழர், மலைக்கிராம மக்கள் மறுவாழ்வுக்காக சேவை செய்த தமிழகத்தைச் சேர்ந்த அலெக்சிஸ் பிரேம்குமார், ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில், கடந்த ஜூன் 2-ம் தேதி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். ஆப்கானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், பாதிரியாரை மீட்க, ஆப்கானிஸ்தான் அரசுடன் இணைந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், மீட்பு நடவடிக்கை குறித்த விவரங்களை, தற்போது வரை இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். பாதிரியார் குடும்பத்தினர், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்து முறையிட்டனர். அவர்களும், பாதிரியார் உறுதியாக மீட்கப்படுவார், நம்பிக்கையாக இருங்கள் என்றனர். இந்நிலையில் பாதிரியார் கடத்தப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும், தற்போது வரை அவரை பற்றிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

‘பாதிரியார் பத்திரமாக இருக்கிறார்’ என ஆறுதல் வார்த்தையை மட்டுமே இந்திய தூதரக அதிகாரிகளும், அவர் பணியாற்றிய கிறிஸ்தவ அமைப்பின் பாதிரியார்களும் தெரிவிக்கின்றனர். பாதிரியாரை மீட்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரது கதி என்ன என்பது தெரியாமல் குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

முதலமைச்சரை பார்க்க முடியவில்லை

பாதிரியாரின் சகோதரர் ஆல்பர்ட் மனோகரன் கூறும்போது, ‘அனைத்து தரப்பினரையும் சந்தித்து அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டோம். ஆனால், கடந்த மூன்று மாதமாக சொன்ன தகவலைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர். முதலமைச்சரை நேரடியாக சந்தித்து முறையிட முயற்சி செய்தோம். அவரை பார்க்க முடியாமல் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுவைக் கொடுத்தோம். அமைச்சர்கள் சிலரை, முதலமைச்சரை பார்க்க ஏற்பாடு செய்யும்படி அணுகினோம். அவர்கள், இப்போதைக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மீட்கப்பட்ட பின், முதல்வரை பார்க்கலாம்.’ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x