Published : 19 Dec 2018 05:11 PM
Last Updated : 19 Dec 2018 05:11 PM
ஆளுநரோ, முதல்வரோ, அமைச்சரோ இடும் வாய்மொழி உத்தரவுகளை ஏற்று செயல்படக்கூடாது என, காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடியாக அபராதம் விதிக்க ஆளுநர் கிரண்பேடி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுப்படி உடனடியாக அபராதம் விதிப்பதில் மட்டுமே போலீஸார் கவனம் செலுத்துவதால் போக்குவரத்து சீரமைப்பு உள்பட இதர பணிகளில் ஈடுபடுவதில்லை என்ற புகார்கள் வந்ததால், அனைத்து காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் ஐஜி சுரேந்திர சிங், டிஐஜி சந்திரன், போக்குவரத்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், போக்குவரத்து ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
"பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். அதை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். இதற்கிடையில் ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக காவல்துறை தலைமை அதிகாரி, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து வாகன ஓட்டிகளிடம் தக்க ஆதாரம் இல்லை என்றால் உடனடியாக அபராதம் வசூலிக்க வேண்டும் என்று வாய்மொழியாகக் கூறியுள்ளார்.
போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய போக்குவரத்து காவலர்கள் உடனடி அபராதம் மூலம் பணம் வசூல் செய்யும் வேலையில் இறங்கியதால் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஓட்டுநர் உரிமம், வண்டியின் ஆதாரம், இன்சூரன்ஸ் கட்டியதற்கான ஆதாரம் ஆகியவை எடுத்துவர காலக்கெடு கொடுக்க வேண்டும். அதன் பின்னர் தான் அபராதம் விதிக்க வேண்டும்.
ஆனால் தற்போது போலீஸார் அவ்வாறு செய்வதில்லை. ஆளுநரோ, முதல்வரோ, அமைச்சர்களோ இடும் வாய்மொழி உத்தரவுகளை ஏற்று செயல்படக்கூடாது. எழுத்துப்பூர்வமாக உத்தரவு இருக்க வேண்டும். வாகன உரிமையாளர்கள் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்திற்குரிய இதர ஆவணங்கள் பெற 2 மாதம் கால அவகாசம் வழங்கப்படும்" என்று நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT