Last Updated : 11 Dec, 2018 09:09 AM

 

Published : 11 Dec 2018 09:09 AM
Last Updated : 11 Dec 2018 09:09 AM

கிராமப்புறங்களில் சேவைகளை எளிதாக வழங்க அஞ்சல் நிலையங்களில் கையடக்க கருவி அறிமுகம்

சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அஞ்சல் சேவை அதிகளவில் கிடைப்பதற்காக மத்திய அரசு ‘தர்பன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அஞ்சல் நிலையங்கள் மூலம் கிராமப் பகுதிகளுக்கு சேமிப்புக் கணக்குகள், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு செல்லுதல், அஞ்சல்துறை சில்லறை வர்த்தக வருவாயை அதிகரித்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு பணப் பலன்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக கணினி வசதி இல்லாத கிராமப்புற அஞ்சல் நிலையங்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கையடக்கக் கருவி (Hand Held Device) வழங்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப் பட்ட கடந்த 3 மாதங்களுக்குள் சென்னை நகர மண்டலத்துக்கு உட்பட்ட 1,625 கிராமப்புற அஞ்சல் நிலையங்களுக்கு இக்கருவி வழங்கப்பட்டுள்ளது.

இக்கருவி மூலம், சேமிப்பு மற்றும் தொடர் வைப்புக் கணக்குகளில் (ஆர்டி) பணம் செலுத்துதல், சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுத்தல், சேமிப்பு, தொடர் வைப்பு மற்றும் தவணை வைப்புக் கணக்குத் தொடங்குதல், மினி ஸ்டேட்மென்ட் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும். மேலும், வங்கி சேவை கிடைக்காத கிராமப்புறங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு இக்கருவியின் மூலம் அஞ்சலக வங்கி சேவைகள் கிடைக்கும்.

கடைக்கோடி கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கும் அஞ்சல் நிலையங்கள் மூலம் அஞ்சல் ஆயுள் காப்பீடு எடுக்க முடியும். அதேபோல், இ-மணியார்டர் சேவை மூலம் நாட்டின் எந்த மூலைக்கும் ஒருசில மணி நேரத்துக்குள் பணம் அனுப்ப முடியும்.

மேலும், முதியோர் ஓய்வூதிய திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் பணம் அஞ்சல் நிலையங்கள் மூலம் பெறலாம்.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x