Published : 11 Dec 2018 09:12 AM
Last Updated : 11 Dec 2018 09:12 AM
செங்கல்பட்டு நகராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பைரோ ஆயில் என்னும் டீசலுக்கு இணையான எரிபொருள் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
எளிதில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாய்கள் அடைபட்டு ஏரி, குளங்கள் பாழாகின்றன. மழைநீர் நிலத்தில் இறங்க முடியாமல் தடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஜனவரி, 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதற்காக பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பைரோ ஆயில் (எரிபொருள்) தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சியில் தினமும், 21.5 டன் குப்பை சேகரமாகிறது. இங்கு, 14 டன் மக்கும் குப்பைகளை கொண்டு நுண் உர செயலாக்க மையம், உரக்குடில் போன்றவை மூலம் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 7.5 டன் மக்காத குப்பை சிமென்ட் கம்பெனிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு தனியாரும், நகராட்சியும் இணைந்து, பைரோ ஆயில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர், மாரி செல்வி கூறும்போது, ‘‘நகராட்சியில் மக்கும் குப்பையைக் கொண்டு உரம் தயாரித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். மக்காத குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை விற்று, அதில் வரும் வருவாயை தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்கி வருகிறோம். தற்போது பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு பைரோ ஆயில் என்ற டீசலுக்கு இணையான எரிபொருளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக என்விரோ எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு தினமும், 2.5 டன் பிளாஸ்டிக் கழிவு வழங்கப்படும். இதில் நகராட்சி செலவு இல்லை’’ என்றார்.
இது குறித்து என்விரோ எனர்ஜி நிறுவன திட்ட இயக்குநர், ஜெயந்த் கூறும்போது, ‘‘பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு ரூ.45 லட்சத்தில் பைரோ ஆயில் (எரிபொருள்) தயாரிக்கப்படவுள்ளது. இதில் கேஸ் மற்றும் கார்பன் முதலியவை தயாரிக்கப்பட உள்ளன. தினமும், 2.5 டன் பிளாஸ்டிக் கழிவு களை கொண்டு, 600 முதல், 700 லிட்டர் பைரோ ஆயில் (எரிபொருள்) தயாரிக்கலாம். இது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. இந்த ஆயிலை இரும்பு உருக்கு ஆலைக் கும், சிமென்ட் நிறுவனங்களுக்கும் பயன் படுத்தலாம். வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இந்த திட்டத்தின் செயல்பாடுகளை பார்த்து மற்ற நகராட்சிகளிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT