Published : 22 Sep 2014 09:58 AM
Last Updated : 22 Sep 2014 09:58 AM

ஐஏஎஸ் தேர்வு எழுதும் பெண்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி: 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ஐஏஎஸ் தேர்வெழுதும் பெண்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பயிற்சி வகுப்புகள் சென்னையில் ராணி மேரி மகளிர் கல்லூரியிலும், மதுரையில் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியிலும் நடத்தப்படுகின்றன.

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்ற பெண்கள் இந்த இலவசப் பயிற்சியில் சேர விண்ணப் பிக்கலாம். வயது 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி, எம்பிசி பிரிவினர்) எனில் 35 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரையும் இருக்கலாம்.

நுழைவுத்தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். நுழைவுத்தேர்வு சென்னை, மதுரையில் அக்டோபர் மாதம் 15-ம் தேதி காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

நுழைவுத்தேர்வில் இந்திய வரலாறு, புவியியல், பொது நிர்வாகம், பொருளாதாரம், நடப்பு நிகழ்ச்சிகள், பொது ஆங்கிலம், அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி பெண்கள் தங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, சாதி, குடும்ப ஆண்டு வருமானம், முகவரி (தொலைபேசி எண்ணுடன்), கூடுதல் செயல்பாடுகள் ஆகிய விவரங்களை வெள்ளைத்தாளில் குறிப்பிட்டு கீழே கையெழுத்திட்டு மேலே வலது புறம் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி சான்றொப்பம் பெற வேண்டும்.

நுழைவுத்தேர்வு கட்டணமாக ரூ.200-க்கு டிமாண்ட் டிராப்ட் (பயிற்சி பெற விரும்பும் கல்லூரியின் முதல்வர் பெயரில்) சுயமுகவரி எழுதப்பட்ட அஞ்சல் தலை ஒட்டிய தபால் உறை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

எந்த கல்லூரியில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த கல்லூரியின் முதல்வருக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் தபால் உறையின் மீது ‘சிவில் சர்வீசஸ் பயிற்சி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட வேண்டும்.

இந்த இலவசப் பயிற்சிக்கு வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மதிப்பெண் விவரம் அக்டோபர் 20-ம் தேதி குறிப்பிட்ட கல்லூரி யின் தகவல் பலகையில் வெளியிடப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் எம்.தேவதாஸ் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x