Published : 01 Dec 2018 10:47 AM
Last Updated : 01 Dec 2018 10:47 AM
தமிழகத்தில் கவுரவமாக அரசியல் நடத்திவரும் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உதயமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. 5-ம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரியலூரில் தவுத்தாய்குளம் புறவழிச் சாலை அருகே இன்று (டிச.1) மாலை பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
அரியலூர் நிகழ்ச்சி உங்கள் கட்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவத்தை தருகிறது?
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில், நடைபெறும் இந்த நிகழ்ச்சி எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும். ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டப் பிரதிநிதிகள் வர வேண்டாம் என்று தெரிவித்துவிட்டோம். இந்த நிகழ்ச்சியை அடுத்து டிசம்பர் 22-ம் தேதி மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பின்னர் மாநில செயல்வீரர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். ஜனவரிக்குப் பிறகு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல் எங்கள் கட்சி முக்கியத்துவம் பெறும். வரும் தேர்தல்களில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.
திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமாகா அக்கட்சியுடன் எத்தகைய உறவில் உள்ளது?
எது கூட்டணி, எது தோழமை என்று அக்கட்சி தெளிவுபடுத்திவிட்டது. எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் தனித்தன்மையோடு செயல்படுகிறோம். தமிழகத்தில் தமாகா, பாமக,தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தன்மையோடு செயல்படுகின்றன.
தனித்தன்மையோடு செயல்படும் உங்களுக்குள் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா?
ஒரே கருத்து ஏற்படும்போது புரிந்து கொள்கிறார்கள். நாங்கள் தனித்தன்மையோடுதான் செயல்படுகிறோம். கூட்டணி குறித்து பின்னர்தான் தெரியும்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அமைந்துள்ள அதிமுக அரசு மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக கருதுகிறீர்களா?
இல்லை. மக்களின் நம்பிக்கையை பெறவில்லை. அரசின் மீது மக்களின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. பல பிரச்சினைகளை தமிழக அரசு தீர்க்கவில்லை. ஆளும் மத்திய அரசும் தமிழகத்தை புறக்கணித்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன.
மத்தியில் ஆட்சி மாற்றம் இருக்கும் என்று சொல்கிறீர்களா?
மத்திய அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது உண்மை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியாளர்கள் தங்கள் இமேஜை சரிசெய்யப் போகிறார்களா என்று பார்க்க வேண்டும். அதற்கான வாய்ப்பு குறைவு. ஜனவரி இறுதியில் இதுகுறித்த தெளிவான நிலை தெரியும்.
தேசிய அளவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் கூட்டணி உருவாகி வருகிறது. இதில் நாங்கள் இடம்பெற சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களை கைப்பற்றியது. அதுபோன்று இந்த முறை திமுக, அதிமுக அல்லது பாஜக போன்ற கட்சிகள் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று கருதுகிறீர்களா?
இனி அப்படியொரு வெற்றி எந்தக் கட்சிக்கும் கிடைக்க 100 சதவீதம் சாத்தியமில்லை.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT