Published : 13 Dec 2018 03:01 PM
Last Updated : 13 Dec 2018 03:01 PM
கொள்ளையன் நாதுராமை பிடிக்க தனிப்படையுடன் சென்ற இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சோக நிகழ்வின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று. அவருக்கு பொதுமக்கள், மாணவர்கள், போலீஸார் அஞ்சலி செலுத்தினர்.
கொளத்தூரில் முகேஷ் என்பவரது நகைக்கடையில் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டது நாதுராம் அவரது கூட்டாளிகள் என தெரிய வந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் மற்றும் தனிப்படை போலீஸார் டிசம்பர் 8-ம் தேதி அவர்களை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றனர்.
பாலிமாவட்டத்தில் செங்கல் சூளை ஒன்றில் பதுங்கியிருந்த நாதுராமை பிடிக்கும் முயற்சியில் தனிப்படையினர் ஈடுபட்டபோது எதிரபாராத விதமாக இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த டிசம்பர் 13-ம் தேதி இதே நாளில்தான் கொள்ளையன் நாதுராமைப் பிடிக்க முயன்றபோது, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் மரணமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, ஜெய்த்ரன் போலீஸில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் புகார் கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் மாநில போலீஸார், பெரியபாண்டியனின் உடலைத் துளைத்தது இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கிக் குண்டு என்று தெரிவித்தனர்.
பெரிய பாண்டியன் கொல்லப்பட்டதில் பல மர்மங்கள் இருந்தது. யார் அவரை சுட்டுக்கொன்றது என்பதில் பல மர்மங்கள் நீடித்தது. பெரியபாண்டியனின் மரணம் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இளம் வயதில் தனது இரண்டு சிறுபிராய மகன்கள் மற்றும் மனைவியை தவிக்கவிட்ட அவரது மரணம் போலீஸாரிடையே பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
பெரிய பாண்டியன் உடல் சென்னை கொண்டுவரப்ப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டப்பின் அவரது சொந்த ஊருக்கு நள்ளிரவில் கொண்டுச் செல்லப்பட்டது. நள்ளிரவில் உடல் வரும் வரையில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பெரிய பாண்டியன் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்த தமிழக அரசு அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது.
இதற்கிடையே பெரியபாண்டியன் இன்ஸ்பெக்டர் முனிசேகரால் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியானது. சென்னை வந்த முனிசேகர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகாவைச் சந்தித்து 'தவறு நடந்துவிட்டது' என்று கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டதாகத் தகவல் வெளியானது. அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் கார்த்தியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கொள்ளையன் நாதுராம் சிக்கினார், தான் பெரிய பாண்டியனை கொல்லவில்லை என அவர் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனுக்கு பானுரேகா என்கிற மனைவியும், ரூபன் ப்ரியராஜ், ராகுல் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். பெரிய பாண்டியன் பற்றி அவரது மனைவி பானுரேகா கூறும்போது, “என் கணவர் வீட்டைப் பற்றி கவலைப்பட மாட்டார். இரவு பகல் பார்க்காமல் பணிபுரிவார். கடமை ஒன்றுதான் அவருக்கு பெரியது என்று கூறியிருந்தார்.
தனது தந்தையுடன் ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பத்தினர் பங்கேற்ற குரூப் போட்டோக்கூட எடுத்ததில்லை அந்த அளவுக்கு காவல்பணியிலேயே அப்பா இருப்பார். எங்களுடன் அவர் செலவிட்ட நேரம் மிகக்குறைவு, கடைசியாக டிச.8 அன்று அவர் ராஜஸ்தான் செல்லும்முன் தெருமுனையில் ஜீப் திரும்பும்போது அப்பா முகத்தை லேசாக பார்த்தேன் அவ்வளவுதான் என அவரது மூத்தமகன் தெரிவித்திருந்தார்.
கடமையை கண்போல நேசித்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டது காவல்துறைக்கு பெரிய இழப்பு, துரதிர்ஷ்டவசமான ஒன்று. பொதுவாக இதுபோன்ற ஆபரேஷன்களுக்கு பயிற்சிப்பெற்ற கேங்க்ஸ்டர்கள் என்று அழைக்கப்படும் போலீஸார் செல்வார்கள். ஆனால் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனுடன் சென்றவர்கள் சாதாரண போலீஸார் என்பதும் இந்த சோக நிகழ்வுக்கு ஒரு காரணம் என்கிற கருத்து போலீஸார் இடையே அப்போது நிலவியது.
இன்று அவரது முதல் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மதுரவாயல் காவல் நிலையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு போலீஸ் அதிகாரிகளும், போலீஸாரும், பொதுமக்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த ஊரிலும் மனைவி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT