Published : 23 Dec 2018 08:14 AM
Last Updated : 23 Dec 2018 08:14 AM

புகை மருந்து பரப்புவதால் கொசுக்கள் சாகவில்லை: மருந்தை ஆய்வு செய்யுமா மாநகராட்சி?

சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ந்த கொசுக்களை ஒழிக்க பயன்படுத்தப்படும் புகை மருந்து பரப்பும் முறையால் கொசுக்கள் சாகவில்லை என தெரியவந்துள்ளது. அதனால் அந்த மருந்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க பொதுசுகாதாரத் துறை சார்பில் 3 ஆயிரத்து314 மலேரியா தொழிலாளர்களைக் கொண்டு நோய்த்தடுப்பு பணிகளும், 2 ஆயிரத்து 35 பணியாளர்களைக் கொண்டு ஒவ்வொருவீடுகளிலும் கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.

மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்ட 89 புகைப் பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச் செல்லப்படும் 335 புகைப் பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் கொசு ஒழிப்புபணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.

இருப்பினும் மாநகரப் பகுதியில் கொசுத் தொல்லை குறையவில்லை. அதற்கான காரணத்தை மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஆராயவில்லை.

அண்மையில் கொடுங்கையூர் பகுதியில் ஒருவர், மாநகராட்சி கொசு புகை பரப்பும் பணியாளரை அழைத்து, உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல் படி, வீட்டினுள் கொசு புகையை பரப்பி அனைத்து கதவுகளை சாற்றியுள்ளார். இவ்வாறு 30 நிமிடங்கள் இருந்தாலே வீட்டினுள் உள்ள அனைத்து கொசுக்களும் இறந்துவிடும். ஆனால் 4 மணி நேரத்துக்கு பிறகு கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் கொசுக்கள் சாகவேயில்லை. அனைத்தும் உயிரோடு மறைவிடங்களில் தஞ்சமடைந்திருந்தனஇந்த நிகழ்வில், கொசு மருந்தை மண்ணெண்ணெயுடன் சரியான விகிதத்தில் பணியாளர் கலக்காமல் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், தற்போது பயன்படுத்தப்படும் மருந்தை எதிர்க்கும் திறனை கொசு பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான ஆய்வை செய்யாமல், பல ஆண்டுகளுக்கு முன்பு வகுத்து கொடுக்கப்பட்ட வழிமுறையை மாநகராட்சி பின்பற்றுவதால் தான் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தாத நிலை நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கொசு மருந்தை அரசிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் வாங்குகிறது. அரசு உரிய சோதனை செய்வதாக மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. அரசு வாங்கும் மருந்தில், வேதிப்பொருட்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் இருக்கிறதா என்பதை மட்டுமே அரசு பரிசோதிக்கிறது. ஆனால் அந்த மருந்துக்கு, தற்போது சென்னையில் வாழும் கொசுவை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதா என ஆய்வு செய்வதில்லை.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கொசு மருந்தை ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கொசுவால் பரவும் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில் தற்காலிக தீர்வாக, வளர்ந்த கொசுக்களை அழிக்கவே புகை பரப்பும் நடவடிக்கை பயன்படும். அது நிரந்தர தீர்வைத் தராது. மாநகரம் முழுவதும் உள்ள நீர்வழித் தடங்கள், மழைநீர் வடிகால் ஆகியவற்றில் கழிவுநீர் தேங்குவதை தடுப்பது, வீடு வீடாக டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுப்பது மட்டுமே கொசுவை ஒழிப்பதற்கான தீர்வாக இருக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x