Last Updated : 07 Dec, 2018 10:31 AM

 

Published : 07 Dec 2018 10:31 AM
Last Updated : 07 Dec 2018 10:31 AM

மழை குறைவு, ஆக்கிரமிப்புகளால் நாமக்கல்லில் குளம், குட்டைகள் வறண்டன- அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்திற்கு சென்றுள்ளது என நிலத்தடி நீர்மட்ட ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழி லாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரி கரையோர பகுதிகளான குமாரபாளை யம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய பகுதிகளில் காவிரி ஆறு பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் கிணறு மற்றும் ஏரிகள் பாசன ஆதாரமாக உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் 72 ஏரிகள் உள்ளன, தவிர உள்ளாட்சி அமைப்பு களின் கட்டுப்பாட்டில் சுமார் 1,000 குளம், குட்டைகள் உள்ளன. இவற்றில் பெரும் பாலான ஏரி, குளங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிரம்பி ஆண்டு முழுவதும் பாசன வசதி அளித்து வந்தன. இதனால், விவசாயமும் செழிப்பாக இருந்தது.

இந்நிலையில் குளம், குட்டை மற்றும் அவற்றின் நீர் வழிப்பாதைகள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இதனால், நீர் நிலைகள் வேகமாகஅழிந்து, மாயமாகும் அபாயம் உள்ள தாக நிலத்தடி நீர்மட்ட ஆய் வாளர்கள் கவலை தெரி விக்கின்றனர். இதனிடையே குளம், குட்டைகள் நீர் வரத்து இல்லாமல் பல ஆண்டுகளாக வறண்டு வானம் பார்த்த பூமியாய் காணப்படுகிறது. அவ்வப்போது பெய்யும் மழையால் குறைந்த அளவு தண்ணீரே தேங்குகிறது. இதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்திற்கு சென்றுள்ளது.

இதுகுறித்து சேந்த மங்கலத்தைச் சேர்ந்த நிலத்தடி நீர்மட்ட ஆய்வாளர் சி.கிருபாகரன் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 700 முதல் 900 மி.மீ., வரை மழை கிடைக்கிறது. இதனை கருத்தில் கொண்டே ஏராளமான குளம், குட்டைகள் அமைக்கப்பட்டன. ஆனால், சில ஆண்டுகளில் சராசரியை விட மழை குறைவாக பெய்கிறது. மழை குறைவு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் 1,500 அடிக்கு கீழ் சென்றுள்ளது. குளம், குட்டைகளுக்கான நீர் வரத்து வழித்தடங்களை மீட்டு, பெய்யும் மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியமாகிறது, என்றார்.

இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், குளங்களுக் கான நீர் வழித்தடங்களை புதுப்பிக்க சிறப்பு திட்டம் வடிவமைத்து, நிதி ஒதுக்கக் கோரி உயரதிகாரிகளின் ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x