Published : 12 Dec 2018 10:18 AM
Last Updated : 12 Dec 2018 10:18 AM
சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் வசிக்கும் ‘வாட்ஸ் அப்’ குழு தமிழர்கள், டெல்டா பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 13 கிராமங்களை தத்தெடுத்து விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர்.
இம்முயற்சியை வெளிநாடு வாழ் ‘டெல்டா’ தமிழர்கள் தொடங்கி உள்ளனர். இவர்களை சிங்கப்பூரில் வசிக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஒருங்கிணைத்து, திண்டுக்கல் வேளாண் பொறியாளரும், இயற்கை விவசாய ஆர்வலருமான பிரிட்டோராஜ், மன்னார்குடியை சேர்ந்த செல்வபூபதி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி செல்வி ஆகியோரின் ஆலோசனையுடன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து பிரிட்டோ ராஜ் கூறியதாவது: கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகளை ஒருங்கிணைத்து ‘டெல்டா இயற்கை விவசாயிகள் குழு’ என்ற ‘வாட்ஸ் அப்’ குழுவை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். அந்த குழுவில் இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் பற்றிய ஆலோசனைகள் தினமும் வழங்கப்படும். இக்குழுவில் 750 உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஆயக்காரன் புலம், பஞ்சநதிக்குளம் கிழக்கு, மேற்கு மருதூர், தகட்டூர், கரும்பம் புலம், தென்னம்புலம், செண்பகராயநல்லூர், பன்னாள் உள்ளிட்ட 13 கிராமங்களை தத்தெடுத்து, அந்த கிராமங்களில் விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் பணிபுரியும் இவர்கள் முதல்கட்டமாக ரூ.4.50 லட்சம் நன்கொடை வழங்கி, 2,000 நாட்டு தென்னை மரக்கன்று களையும், 8,000 மாங்கன்றுகளையும் வழங்கி உள்ளனர்.
இரண்டாம் கட்டமாக, நிலமில்லாத விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு கோழி குஞ்சுகளையும், ஆடு, மாடுகளையும் வழங்க உள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT