Published : 24 Dec 2018 07:50 PM
Last Updated : 24 Dec 2018 07:50 PM

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்: டிஜிபியிடம் இரும்பு வியாபாரி புகார்

கோயில் சிலையைக் கடத்தியதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததாக பழைய இரும்பு வியாபாரம் செய்பவர் டிஜிபியிடம் புகார் அளித்தார்.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணிபுரிந்த அதிகாரிகள் 23 பேர், பொன் மாணிக்கவேலுவுக்கு எதிராக டிஜிபியிடம் கடந்த 19-ம் தேதி புகார் மனு கொடுத்தனர்.

உயர் நீதிமன்றம் ஒப்படைத்த 333 வழக்குகளில் 10 சதவீதம்கூட கண்டுபிடிக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். தங்களைச் செயல்படவே விடவில்லை, குற்றவாளி என்று ஒருவரைக் கொடுப்பார். ரிமாண்ட் செய்யச் சொல்வார் அவரை விசாரிக்கக்கூட அனுமதிக்க மாட்டார் என அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், புதிய புகார் ஒன்று இன்று டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல் என்பவரும் அவருக்கு தனது சிலையை விற்ற சிலையின் உரிமையாளர் தீனதயாளன் என்பவரும் இன்று டிஜிபி அலுவலகம் வந்து, பொன் மாணிக்கவேலுக்கு எதிராகப் புகார் மனு கொடுத்தனர்.

டிஜிபியிடம் புகார் கொடுத்த பின்னர் தீனதயாளன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் போரூரில் வசித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நெற்குன்றத்தில் ஒரு பட்டறையில் பித்தளை மோல்டிங்கில் செய்து ரூ. 7000 கொடுத்து லட்சுமி சிலை வாங்கினேன். அதை என் வீட்டிலும் பின்னர் அலுவலகத்திலும் வைத்திருந்தேன்.

எனக்கு சில பிரச்சினைகள் வந்ததால் சிலையைக் கொடுத்துவிடு என பெரியவர்கள் சொன்னதன்பேரில் பழைய காயலான் கடையில் எடைக்குப் போடச் சென்றேன். அப்போது எங்கள் ஏரியா இளைஞர்கள் சிலர் அய்யா சிலை நன்றாக இருக்கு எங்களுக்கு கொடுங்க என்று வாங்கினார்கள். பார்த்துக்கங்கப்பா கஷ்டம் வரப்போகுது என்று சொன்னேன். அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் கடந்தன. அதன் பின்னர் பேப்பரில் பார்க்கிறோம் இந்தச் சிலையை என்னென்னவோ செய்து வியாபாரம் செய்தார்கள் என்று கைது செய்திருந்ததைப் பார்த்தேன்.

அது சாதாரண சிலை, பித்தளைப் பட்டறையில் செய்தது. ஆனால் சிலையைக் கடத்தியதுபோல் அந்த இளைஞர்களை கைது செய்திருந்தனர். நான்தான் சிலைக்கு சொந்தக்காரன்'' என்று தீனதயாளன் தெரிவித்தார்.

உங்களை போலீஸார் கைது செய்தார்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தீனதயாளன்,  ''இல்லை, நான் சிலைக்குச் சொந்தக்காரன். என்னைக் கைது செய்யவுமில்லை, விசாரிக்கவும் இல்லை. ஆனால் என் மீது பொய் வழக்கு போட்டனர். அது தொன்மை வாய்ந்த சிலையும் கிடையாது. கோயில் சிலையும் கிடையாது. 7 ஆண்டுகளுக்கு முன் பித்தளை பட்டறையில் செய்து வாங்கிய சிலை. அதனால் உண்மைத்தன்மையை அறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோருகிறோம்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் என்னிடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் அனைத்து விஷயங்களையும் கூறினேன். ஆனால் அவர்கள் எதையுமே காது கொடுத்து கேட்கவில்லை'' என்றார்.

சிலைக் கடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பிய பழைய இரும்பு வியாபாரி சக்திவேல் கூறியதாவது:

“தீனதயாளிடம் இருந்து எடை ரேட்டுக்கு பழைய விலைக்கு வாங்கிய சிலை அழகாக இருந்தது. அதை விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறியதால், நானும் அதை விற்க முயன்றேன். இதற்காக பலரிடம் பேசினேன். அப்போது மணி என்பவர் என்னிடம் வந்து, சிலையை வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன் என்றார்.

சிலையை வாங்க வருபவர்களுக்காக போரூரில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து கொடுக்கச் சொன்னார். என்னைக் கட்டாயம் காரில்தான் வரவேண்டும் என்றும் வற்புறுத்தினார். 7000 ரூபாய் சிலைக்காக நான் ஏன் ரூம் போடணும் காரில் வரணும் முடியாது என்று மறுத்துவிட்டேன். அதன் பின்னர் ஒரு இடத்தில் நிற்கச் சொன்னார்கள். பின்னர் காரில் கொண்டு சென்றதுபோல் காட்டி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நான் சென்ற காரை வழிமறித்து என்னை கைது செய்தனர்.

அதன் பின்னரே மணி என்பவர் போலீஸ் இன்பார்மர் என்பதை தெரிந்து கொண்டேன். ஏதோ ஒரு கோயில் பெயரைச் சொல்லி அந்த கோயிலில் திருடப்பட்ட சிலை என்று என்மீது வழக்குப்பதிவு செய்து என்னைச் சிறையில் அடைத்து விட்டனர். நீதிபதியிடம் என் பிரச்சினை சொல்லவிடவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x