Published : 21 Sep 2014 09:18 AM
Last Updated : 21 Sep 2014 09:18 AM
மோகனூர் காவிரி ஆற்றில் சர்ச்சைக்குரிய இடத்தில் மணல் குவாரி அமைக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
அரசு மணல் குவாரி போர்வையில் ஆற்றில் இயற்கையாக அமைந்துள்ள ராயன் மணல் திட்டு மற்றும் காட்டுப்புத்தூர் வாய்க்கால் கொரம்பு பகுதியில் மணல் அள்ளப்படுவதாகவும், அதனால் பல ஆயிரக்ணக்கான விளைநிலம் பாசன வசதியின்றி 'பாலைவனமாக’ மாறும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் காவிரி ஆறு பரந்து விரிந்து செல்கிறது. காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரும்பு, வாழை, வெற்றிலை போன்றவை பிரதான பயிர்கள். அங்கு சாகுபடியாகும் கரும்பை மையமாகக் கொண்டு மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. காவிரி மட்டுமின்றி அதில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால் மூலமும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் வடுகப்பட்டி காவிரியாற்றின் கரையிலிருந்து கிழக்கு நோக்கி வாய்க்கால் ஒன்று செல்கிறது. அந்த வாய்க்கால் காட்டுப்புத்தூர் வாய்க்கால் என அழைக்கப்படுகிறது. திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காட்டுப்புத்தூர் வாய்க்கால், நாமக்கல் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட பகுதியில் தொடங்குகிறது. இந்த வாய்க்கால் மொத்தம் 12 கி.மீ. தூரம் செல்கிறது.
இதன்மூலம் மோகனூர் மற்றும் காட்டுப்புத்தூரில் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. தொடக்க காலத்தில் ஜமீன்தார் மூலம் வாய்க்கால் பராமரிப்பு செய்யப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் நீர்வளம் மற்றும் ஆற்றுப் பாதுகாப்பு துறையினரால் பராமரிப்பு செய்து தண்ணீர் வழங்கப்பப்பட்டு வருகிறது.
இந்த வாய்க்கால் அருகே ராயன் திட்டு என்ற மணல் திட்டு அமைந்துள்ளது. இது இயற்கையாக அமைந்தது. இந்த மணல் திட்டு மற்றும் அதன் அருகே வாய்க்கால் கொரம்பு பகுதியில் (தலைப்பகுதி) மணல் குவாரி அமைத்து மணல் அள்ளுவதற்கு அப்பகுதி விவசாயிகள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதியில் மணல் அள்ளுவதால் சம்பந்தப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் வருவது முற்றிலும் தடைபடுவதுடன், விளைநிலங்கள் பாசன வசதியின்றி 'பாலைவனமாக' மாறும் அபாயம் உருவாகும் என்பது விவசாயிகளின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாகும்.
இச்சூழலில் கடந்த 2012-ம் ஆண்டு காட்டுப்புத்தூர் வாய்க்கால் கொரம்பு பகுதியில் குவாரி அமைக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதியளிக்கப்பட்டது. இது காட்டுப்புத்தூர் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிர, இயற்கையாக அமைந்த ராயன் மணல் திட்டு, வாய்க்கால் கொரம்பு பகுதியில் அந்த மணல் திட்டில் பல ஆயிரம் டன் மணல் உள்ளது. அந்த மணல் தற்போது அள்ளப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி கூறியது:
“கடந்த 2012-ம் ஆண்டு மணல் அள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. காவிரி ஆற்றின் போக்குக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மணல் அள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ராயன் திட்டு பகுதியில் மணல் அள்ளுவது சம்பந்தமாக விசாரணை நடத்தி முழு விவரம் அளிக்கிறேன்’’ என்றார்.
தீவிர கண்காணிப்பு
மோகனூர் ஒருவந்தூர் அருகே காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைந்துள்ளது. அரசு மணல் குவாரி என்றாலும் அங்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவந்தூரில் தொடங்கி குவாரி வரை குறிப்பிட்ட சில அடி தூரம் வரை ஆட்களை அமரச் செய்து அவ்வழியாக யார் வருகின்றனர், போகின்றனர் என தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. எதற்காக, யாருக்காக இந்த கண்காணிப்பு என்பது மர்மமாக உள்ளது.
குவாரி அனுமதி வழங்கியதால் கலவரம்
கடந்த 1993-ம் ஆண்டு காட்டுப்புத்தூர் வாய்க்கால் கொரம்பு மற்றும் ராயன் மணல் திட்டு அருகே மணல் அள்ள தனியார் ஒருவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய தொட்டியம் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். சிவபதியிடம், விவசாயிகள் தகராறில் ஈடுபட்டனர். அதையடுத்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT