Published : 15 Dec 2018 12:58 PM
Last Updated : 15 Dec 2018 12:58 PM
'கஜா' புயல் டெல்டா மாவட்டங்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே வேரோடு அழித்துள்ள இந்த சமயத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. கர்நாடக அரசுக்கு அளித்திருக்கும் இந்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதமும் எழுதியிருக்கிறார்.
காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்குத் தமிழகத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும் என மிகத் தெளிவாக கூறியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை எனவும், மத்திய பாஜக அரசு அதற்கு துணை போவதாகவும் இங்குள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். இந்த அணை ரூ.5,912 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.
அணை கட்டப்படவிருக்கும் மேகேதாட்டு பகுதிக்கு தமிழகத்தில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியை சேர்ந்த தமாகா இளைஞரணி நிர்வாகிகள் சமீபத்தில் சென்றனர். அந்த இடம் எப்படி உள்ளது, பணிகள் ஏதேனும் நடைபெறுகிறதா என்பது குறித்து யுவராஜாவிடம் பேசினோம்.
"ஒகேனக்கலில் இருந்து 159 கி.மீ. சாலை மார்க்கமாக அஞ்சட்டி, சங்கமம் வழியாக மேகேதாட்டுவை அடைந்தோம். அணை கட்டவுள்ள வனப்பகுதிக்கு பாதுகாப்பையும் மீறி சென்றோம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றாலும் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். கர்நாடக அரசு இது வெறும் தடுப்பணைதான் என்று கூறுகிறது. ஆனால், அது முழுக்க முழுக்க வடிகட்டிய பொய்" என்கிறார் யுவராஜா.
கர்நாடக அரசு ஆய்வை மேற்கொண்டு வருகிறது என்பதே பொய் எனக்கூறும் யுவராஜா, அங்கு ஆய்வுகள் முடிந்துவிட்டன என்கிறார்.
"ஆய்வுகள் முடிந்து அளவீட்டு பணிகளும் நிறைவடைந்து விட்டன. 99 மீட்டர் உயரம், 318.50 மீட்டர் நீளம் கொண்ட அணையை கட்ட திட்டமிட்டுள்ளனர். பெரும் மலையளவுக்கு அந்த அணை கட்டப்படவுள்ளது. இதனால், 64 டிஎம்சி காவிரி நீரை தேக்கி வைக்க முடியும். மேட்டூர் அணையின் கொள்ளளவு 90 டிஎம்சி தான். பவானிசாகர் 32 டிஎம்சி தான். பவானிசாகரை விட இரண்டு மடங்கு பெரிய அணையை தடுப்பணை என்ற பெயரில் கட்டுகின்றனர். இந்த அணையை கட்டிவிட்டால் மேட்டூர் அணை வெறும் கண்காட்சி பொருளாகத்தான் இருக்கும்.
வனப்பகுதியின் உள்ளே 7 கி.மீ.க்கு சாலை அமைத்துள்ளனர். இதற்காக 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரிய பாலம் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்து விட்டன. யாரும் உள்ளே செல்லக்கூடாது என்பதற்காக 6 இடங்களில் தடுப்புகள் அமைத்துள்ளனர்" என்றார் யுவராஜா.
மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் எந்த அளவுக்கு பிரச்சினைகளை சந்திக்கும் என்பதை விளக்கிய யுவராஜா, "மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழக அணைகளில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையே போய்விடும். இனி கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை நமக்கு கர்நாடக அரசு தரும்.
இந்த அணை கட்டினால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் அழுத்தம் குறையும், அந்தப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீரும், பசுமை கொழிக்கும், சுற்றுலா மேம்படும் என கர்நாடக அரசு கூறுகிறது. நமது வாழ்வாதாரமான காவிரி நீரை வைத்து அவர்கள் வணிகம் செய்ய பார்க்கின்றனர்.
அட்டப்பாடி தடுப்பணை 10 அடி, பாலாறு 14 அடி. இது 320 அடி உயரம். மழை, வெள்ள காலம் தவிர இனி தமிழகத்திற்கு தண்ணீர் வராது. இதனை தடுப்பணை என சொல்வதே தவறு, இது மிகப்பெரிய அணை" என கூறுகிறார் யுவராஜா.
மேகேதாட்டு அணை கட்டப்படும் இடத்தில் தமாகா கட்சியின் கொடியை நட்டு சிறு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மேகேதாட்டு பிரச்சினையை விவசாய பிரச்சினையாக நினைக்காமல் தமிழ்ச்சமூகம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதே மேகேதாட்டுவுக்கு சென்றவர்களின் கோரிக்கையாக உள்ளது.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT