Last Updated : 24 Dec, 2018 06:19 PM

 

Published : 24 Dec 2018 06:19 PM
Last Updated : 24 Dec 2018 06:19 PM

கைவிரித்த காப்பகங்களால் பரிதவித்த மனநலம் பாதித்த பெண்: உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்கள்; சேலம் ஆட்சியர் மூலம் நடவடிக்கை

சேலத்தில் பத்து நாட்களாக ஆதரவற்று சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை, சேர்த்துக்கொள்ள காப்பகங்கள் கைவிரித்தன. திருப்பூரை சேர்ந்த தன்னார்வாளர்கள் சேலம் வந்து மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு, ஆட்சியர் ரோகிணி மூலம் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

சேலம் கருப்பூர் அருகே சாலைகளில் பத்து நாட்களாக மனநலம் பாதித்த பெண் சுற்றிதிரிந்துள்ளார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் மனநலம் பாதித்த பெண் புகைப்படத்துடன், தகவல் வெளியிட்டு உதவிபுரிய கோரியுள்ளனர். இதனை, திருப்பூரை சேர்ந்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிர்வாகி தெய்வராஜ்(38) முகநூல் பக்கத்தில் பார்த்துள்ளார். அவர், திருப்பூரில் இருந்தபடி கடந்த பத்து நாட்களாக, சேலத்தில் உள்ள தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பு, காப்பகங்களை தொடர்புகொண்டு, மனநலம் பாதித்த பெண்ணை மீட்க வேண்டி முயற்சி செய்தார். ஆனால், ஒருவரும் முன் வராத நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை தெய்வராஜ், தேன்மொழி, லோகநாதன் ஆகியோர் சேலம், கருப்பூர் வந்து மனநலம் பாதித்த பெண்ணை மீட்டனர்.

சேலத்தில் உள்ள காப்பகங்களில் மனநலம் பாதித்த பெண்ணை சேர்த்துவிட முயற்சி எடுத்ததில், 'இடமில்லை' என ஒற்றை வார்த்தையில் அனைவரும் தட்டி கழித்துவிட்டனர். இதையடுத்து, சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனநலம் பாதித்த பெண்ணை அழைத்து வந்து, மக்கள் குறைதீர் கூட்டம் வாயிலாக ஆட்சியர் ரோகிணியை சந்தித்து மனு அளித்தனர். மனலம் பாதித்த பெண்ணை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஆட்சியர் ரோகிணி, சமூக நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார்.

இதுகுறித்து திருப்பூர் தன்னார்வளர் தெய்வராஜ் கூறியதாவது:

முடி வெட்டும் தொழிலில் கிடைக்கும் வருமானத்தைகொண்டு, மனநலம் பாதித்து, ஆதரவற்று சாலையில் திரியும் நபர்களை தேடி பிடித்து, அவர்களுக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுத்து வருகிறோம். கடந்த 18 ஆண்டுகளில் மனநலம் பாதித்து ஆதரவற்ற 2 ஆயிரம் பேரை, காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம். சேலத்தில் மனநலம் பாதித்த பெண் ஆதரவற்று சுற்றித்திரிவதை முகநூல் வாயிலாக அறிந்து, இங்குள்ள காப்பகங்களை நாடினோம். ஆனால், இடமில்லை என மறுத்துவிட்டதால், வேறுவழியின்றி, அவரை காப்பாகத்தில் சேர்த்துவிட ஆட்சியர் ரோஹிணியிடம் மனு அளித்தோம். அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க இசைந்துள்ளார். மனநலம் பாதித்த பெண் யார், எந்த ஊர், என்ன பெயர் என்பது குறித்து அவருக்கு சொல்ல தெரியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x