Published : 08 Dec 2018 05:20 PM
Last Updated : 08 Dec 2018 05:20 PM
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஊர்க்காவல் படையினர் ஆயிரக்கணக்கில் திடீரென திரண்டு சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை காவல்துறையில் போலீஸார், ஆயுதப்படை போலீஸார், சிறப்புக்காவல் படை போலீஸார் என உண்டு. காவல் நிலையங்களில் போலீஸார் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து என பணியாற்றுவர். இன்னும் பல போலீஸார் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவர்.
இதுதவிர ஆயுதப்படை, சிறப்புக்காவல் போலீஸார் பாதுகாப்புப் பணி மற்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுவார்கள். இது தவிர காவல்துறைக்கு சேவையாற்ற வருபவர்களை ஊர்க்காவல் படை என தனியாக எடுப்பார்கள். இவர்கள் காவலர்கள்போல் அல்லாமல் மற்ற பணிகளிடையே ஊர்க்காவல் படையில் இருப்பார்கள்.
இவர்களுக்கு காவல்துறையில் போலீஸாருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது, பேரிடர் காலம், கலவரக் காலம், தேர்தல் பாதுகாப்பு மற்ற சாதாரண நாட்களில் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்புக்காக உதவுவார்கள். இதில் போலீஸ் போன்றே சீருடை, பதவி உயர்வு எல்லாம் உண்டு. இவர்களுக்காக காவல்துறையில் டிஜிபி பதவி அதிகாரி பொருப்பு உண்டு.
ஆண்டுக்கு ஒருமுறை சீருடை, தினமும் 500 ரூபாய் படி என்கிற அளவில் பணி வழங்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தெலங்கானாவில் நடந்த தேர்தல் பணிக்காக 2500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணிக்காகச் சென்றனர். இன்று காலை சென்னை திரும்பினர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அனைவரும் திரண்டிருந்தனர்.
அப்போது அங்கு அவர்களுக்கு தெலங்கானாவில் ஏற்பட்ட அனுபவம் ஏற்கெனவே உள்ள கோரிக்கைகளை வைத்து திடீரென சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் பேசியபோது அவர்கள் கூறியதாவது:
''எங்களுக்கு தினப்படி ரூ.500, போலீஸாருக்கு இணையாக உயிரைப் பணயம் வைத்து பணியில் ஈடுபடுகிறோம். ஆனால் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை தருகிறார்கள். நாங்கள் கேட்பது 30 நாட்களும் எங்களுக்குப் பணி வழங்குங்கள். எங்களை நிரந்தரமாக்குங்கள் என்று கோருகிறோம்.
எங்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை, தெலங்கானாவிற்கு தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. நல்ல சாப்பாடு, தங்குமிடம் எதுவும் இல்லை. 5 நாட்களும் கொசுக்கடியில் மரண அவஸ்தைப்பட்டோம். இதற்கு மட்டும் ஊர்க்காவல் படையினர் தேவை. மற்ற கோரிக்கைகள் வைத்தால் கண்டுகொள்வதே இல்லை.
ஆந்திராவில் உள்ள ஊர்க்காவல் படையினர் எங்களைக் கேவலமாகப் பார்க்கின்றனர். அங்கு அவர்களுக்கு பணி நிரந்தரம், மாதம் 21,000 ரூபாய் சம்பளம், அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன. இங்கு எங்களுக்கு மாதம் 16,000 ருபாய் சம்பளம். மாதம் முழுவதும் பணி கேட்கிறோம். ஆனால் பரிசீலிக்க மறுக்கிறார்கள்''.
இவ்வாறு ஊர்க்காவல் படையினர் தெரிவித்தனர்.
சாலைக்கு வந்த அவர்கள் சாலையின் ஒரு பக்கத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரி விளக்கம்:
ஊர்க்காவல் படையின் தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், “காவல் துறையினருக்கு வழங்கப்படும் நிதியில் இருந்துதான், எங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் ஊர்காவல் படையினருக்கான நிதி, காவல் துறையில் இருந்து சரியான நேரத்தில் வருவதில்லை.
பணிபுரிந்த வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகையில் ஏற்கனவே பாக்கி வைக்கப்பட்டுள்ளது. பாக்கி தொகையை வீரர்கள் கேட்கும்போது எங்களுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. ஊர்க்காவல் படையினருக்கு கொடுப்பதற்கு போதிய நிதி இல்லாததால், அவர்களுக்கு பணி ஒதுக்குவதையும் குறைத்து விட்டோம்.
ஒருசில வீரர்கள் காவல் நிலைய அதிகாரிகளுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT