

காற்று மாசு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை யில் “உலகில் 10-ல் 9 பேரால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. உலக அளவில் காற்று மாசுவால் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
காற்றில் கலந்துள்ள மிக நுண்ணியதுகள் மாசுகளால் நுரையீரல், இதயம், மூளை ஆகியவை கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. காற்று மாசுவால் குழந்தைகளும் முதியோரும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பருவநிலை மாற்றத்துக்கு காற்று மாசுவும் ஒரு காரணம்” என்று கூறப்பட்டுள்ளது.
எனவேதான் மாசு கட்டுப் பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் டிசம்பர் 2-ம் தேதியை தேசிய மாசு கட்டுப்பாட்டு தினமாக அனுசரிப்பது. இந்த தேதியை தேர்வு செய்ததற்கான காரணம் போபால் விஷவாயு கசிவு சம்பவம்தான்.
1984-ம் ஆண்டு இதே நாளில் தான் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இயங்கி வந்த யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந் தனர். உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை பேரிடர் இதுதான். இந்த பேரிடரில் உயிரிழந்தவர் களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இது போன்ற பேரிடர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் விஷவாயு கசிந்த டிசம்பர் 2-ஐ தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம், தொழிற்பேட்டைகளில் காற் றின் தரத்தையும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதையும், காற்று மாசுபடுவதையும் கண்காணித்து வருகிறது.
சுற்றுச்சூழல் சார்ந்த வழக்கு களை விரைந்து முடிப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தை கடந்த 2010-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அதே ஆண்டிலேயே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு டெல்லியில் அமைக்கப்பட்டது. பின்னர் கொல்கத்தாவில் கிழக்கு மண்டல அமர்வும் புனேயில் மேற்கு மண்டல அமர்வும் போபாலில் மத்திய மண்டல அமர்வும் சென்னையில் தென் மண்டல அமர்வும் அமைக்கப்பட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வான சென்னையில் டெல்லிக்கு அடுத்தபடியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. அதனால் முதன் முதலாக சென்னையில் 2-ம் அமர்வும் தொடங்கப்பட்டது.
1972-ல் உருவாக்கப்பட்டது
“யாரால் மாசு ஏற்படுத்தப் பட்டதோ, அவரே மாசுவை சரி செய்து, சுற்றுச்சூழலை மீட்டெடுப் பதற்கான செலவை ஏற்க வேண் டும்” என்ற நோக்கத்தில், பன் னாட்டு அமைப்பான ‘பொருளா தார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு’ சார்பில் ‘பொல்யூட்டர் பேஸ் பிரின்சிபல்’ (Polluter Pays Principle) என்ற விதி கடந்த 1972-ம் ஆண்டு உரு வாக்கப்பட்டது. அந்த விதிகள் தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத் திலும் சேர்க்கப்பட்டன.
முதல்முறையாக நடவடிக்கை
இந்த சட்டப்படி முதன்முறை யாக நடவடிக்கை எடுக்கப்பட்டது ராணிப்பேட்டையில் நிகழ்ந்த 10 பேர் உயிரிழப்புச் சம்பவத்தில்தான். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டை பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த ஜனவரி 31-ம் தேதி கழிவு நீர் தொட்டி இடிந்த விபத்தில், நச்சுக் கழிவுநீரில் மூழ்கி 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசா ரித்த அப்போதைய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, ‘பொல்யூட்டர் பேஸ் பிரின்சிபல்’ விதிகளின் கீழ், முதல்முறையாக ரூ.75 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
உயிரிழந்தோர் குடும்பங் களுக்கு நிவாரணமும் சுத்திகரிப்பு நிலையத்தால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பை சீர் செய்யவும் வேண்டும் என அந்த உத்தரவில் கூறியிருந்தார்.
இந்த உத்தரவுக்குப் பின்னரே ‘பொல்யூட்டர் பேஸ் பிரின்சிபல்’ பிரபலமடையத் தொடங்கியது. இதற்கு நீதிபதி பி.ஜோதிமணியும் முக்கிய காரணம்.
மாசு ஏற்படுத்தும் தொழிற் சாலைகளுக்கு இந்த ‘பொல்யூட்டர் பேஸ் பிரின்சிபல்’ என்ற விதி பெரும் சவாலாகவும் அதேநேரம் சுற்றுச்சுழலை பாதுகாக்க கிடைத்த வரப்பிரசாதமாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.