Published : 01 Dec 2018 10:55 AM
Last Updated : 01 Dec 2018 10:55 AM
காஞ்சிபுரத்துக்கு வந்த திருப்பதி, புதுச்சேரி ரயில் எஞ்சினை நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளும் பரிதவித்தனர்.
காஞ்சிபுரம் ரயில் பாதையை அகலப்பாதை வழித்தடமாக மாற்றக் கடந்த 1999ஆம் ஆண்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, , காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரத்தைச் சேர்ந்த மும்தாஜ் பேகம், அப்துல் ரஷீத் ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி, தென்னக ரயில்வே வசம் ஒப்படைத்தது.
இதற்காக, சம்பந்தப்பட்ட வர்களுக்கு அப்போதைய நில வழிகாட்டல் மதிப்பீட்டு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை கூடுதலாக இழப்பீட்டுத் தொகை கேட்டு, காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் இழப்பீட்டு வழங்க தீர்ப்பளித்தது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக எவ்வித பதிலையோ இழப்பீட்டையோ அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, மனுதாரர், இழப்பீட்டுத்தொகையை விரைந்து வழங்குமாறு உத்தரவிடக் கோரி கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அதன்பேரில், இழப்பீட்டுத் தொகை தராததால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் வாகனங்கள் மற்றும் புதுச்சேரி-திருப்பதி ரயிலின் என்ஜின் ஆகியவற்றை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று காலை காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது, திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் ரயில் காலை வந்தடைந்தது.
அந்த ரயிலின் என்ஜினை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள், ரயில் நிலைய மேலாளர், ரயில் ஓட்டுநரிடம் உரிய உத்தரவு நகலை அளித்தனர். இந்த செய்தி ரயிலில் அமர்ந்திருந்த அமர்ந்திருந்த பயணிகளின் காதுக்கு எட்டியது இதைக் கேட்ட ரயில் பயணிகள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தனர்.
ஆனால், வருவாய்துறை அதிகாரிகள் மனுதாரரைத் தொடர்பு கொண்டு ஒரு சில நாட்களில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிடும் எனஉறுதியளித்து, ரயில் எஞ்சின், மாவட்ட ஆட்சியரின் கார் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனால், மனுதாரர் வழக்கறிஞர், நீதிமன்ற அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால், காஞ்சிபுரம் ரயில்நிலையத்தில் ஒருமணிநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT